நடிக்க மாட்டேன், இயக்குவேன் : ரஜினி மகள் சவுந்தர்யா!
திங்கள், 14 ஜனவரி 2008 (12:42 IST)
''சினிமாவில் நடிக்கும் எண்ணம் எனக்கு இல்லை என்றும், தொடர்ந்து படங்களை இயக்குவேன்'' நடிகர் ரஜினி மகள் சவுந்தர்யா கூறினார்.
ஆர்ச்சர் ஸ்டூடியோவும், அட்லாப்ஸ் நிறுவனமும் இணைந்து ரஜினிகாந்த் நடிக்கும் `சுல்தான் தி வாரியர்' என்ற அனிமேஷன் படத்தை தயாரிக்கிறது. இப்படத்தை இயக்கியுள்ளார் அவருடைய இளைய மகள் சவுந்தர்யா. இப் படத்தின் குறும் படத்தையும், டிரைலரையும் சவுந்தர்யா நேற்று செய்தியாளர்களுக்கு திரையிட்டு காண்பித்தார். பின்னர் அவர் அளித்த பேட்டியில், 'சுல்தான் தி வாரியர்' படம் ரூ.40 கோடி செலவில் தயாராகி வருகிறது. இதற்கு முன் இந்தியாவில் சில `அனிமேஷன்' படங்கள் வந்துள்ளன. ஆனால் இந்த அளவுக்கு பிரமாண்டமான-தரமான படம் இதுவரை வந்ததில்லை.
இந்த படத்தில் நடித்ததன் மூலம் என் தந்தை ரஜினிகாந்த், இந்தியாவில் உள்ள `சூப்பர் ஸ்டார்'களில் அனிமேஷன் படத்தில் நடித்த முதல் `சூப்பர் ஸ்டார்' என்ற பெருமையை பெறுகிறார். படத்தில் நடிப்பதற்கு முன்பு, அவர் என்னிடம் சில சந்தேகங்களை கேட்டார். ஒரு இயக்குனர் என்ற முறையில், கதை பற்றியும், படம் தயாரிக்கும் முறை பற்றியும் அவருக்கு விளக்கி சொன்னேன். இந்த படத்தில், 4 பாடல்கள் இடம்பெறுகின்றன. 4 பாடல்களையும் கவிஞர் வைரமுத்து எழுதியிருக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருக்கிறார்.
ரஜினிகாந்திடம் ரசிகர்கள் என்னென்ன எதிர்பார்ப்பார்களோ, அவை எல்லாமே படத்தில் உள்ளன. அவருடைய ஸ்டைல், மேனரிசம், பஞ்ச் வசனங்கள் எல்லாமே படத்தில் இடம்பெறுகின்றன. வில்லன், நகைச்சுவை நடிகர் ஆகியோரும் இருக்கிறார்கள். சண்டை காட்சிகளும் உள்ளன. படத்தில், ரஜினிகாந்துக்கு ஜோடி இருக்கிறது. ஆனால், இப்போது உள்ள கதாநாயகிகள் யாரும் இல்லை. அவருடைய ஜோடி, அனிமேஷனில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. மொத்தம் 80 பேர்களை கொண்ட ஒரு `டீம்' படத்தில் பணிபுரிகிறார்கள்.
இந்த வருட இறுதிக்குள் படத்தை முடித்து விடுவோம். ஒரு ரசிகையாக இருந்து, என் தந்தைக்கு இந்த படத்தை அர்ப்பணிக்கிறேன். `சுல்தான் தி வாரியர்,' இந்தியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்க்கும் படமாக இருக்கும். சினிமாவில் நான் நடிக்க மாட்டேன். காமிராவுக்கு பின்னால் மட்டுமே பணிபுரிவேன். இந்த படத்துக்கும், `ரோபோ'வுக்கும் நிச்சயமாக சம்பந்தம் இல்லை என்று சவுந்தர்யா கூறினார்.