சங்கமம் என்ற தமிழ் படத்தில் அறிமுகம் ஆனவர் நடிகை விந்தியா. இவர் 2004ஆம் ஆண்டு தர்மபரி மாவட்டம் ஓசூருக்கு 'கன்னி நிலா' என்ற படத்தின் படப்பிடிப்புக்காக சென்றார். அப்போது, ஓசூரில் உள்ள சிவரஞ்சனி ஓட்டலில் தங்கி இருந்தார். 200ஆம் ஆண்டு பிப்ரவரி 26ஆம் தேதி அன்று நள்ளிரவு 2 மணிக்கு ஓசூர் சிப்காட்டை சேர்ந்த தொழில் அதிபர் விஜய்கமல்ராஜ், விந்தியா தங்கி இருந்த அறைக்குள் புகுந்தார். அப்போது விந்தியாவை அவர் பாலியல் பலாக்காரம் செய்ய முயன்றதாக தெரிகிறது.
இதுபற்றி ஓசூர் டவுன் காவல் நிலையத்தில் விந்தியா புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் விஜய் கமல்ராஜ், அவரது நண்பர் சம்பத்குமார் ஆகியோர் மீது பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக ஓசூர் அமர்வு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இதைத் தொடர்ந்து நடிகை விந்தியாவை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று விஜய் கமல்ராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில் நடிகை விந்தியாவும் ஓசூர் நீதிமன்றத்தில் நடந்து வரும் பாலியல் பலாத்கார முயற்சி வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், பாலியல் பலாத்கார முயற்சி வழக்கு ஓசூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இருந்த போதும் நாங்கள் இருவரும் சமரசமாக செல்ல முடிவு செய்துள்ளோம். நடந்த தவறுக்கு விஜய் கமல்ராஜ் வருத்தம் தெரிவித்துள்ளதால் இந்த வழக்கை தொடர்ந்து நடத்த விரும்பவில்லை. அதனால் அதை திரும்ப பெறுகிறேன். இதனால் ஓசூர் நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் நடிகை விந்தியா கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எம்.ஜெயபால் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகை விந்தியாவும், விஜய் கமல்ராஜும் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர்.
அரசு தரப்பில் வழக்கறிஞர் சரவணன் ஆஜராகி வாதாடுகையில், பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி என்பது கடுமையான குற்றம்,. இதில் நடிகை விந்தியா சமரசமாக செல்வதை நீதிமன்றம் ஏற்கக் கூடாது. இந்த வழக்கை தொடர்ந்து நடத்த வேண்டும் என்று வாதிட்டார்.
இதைத் தொடர்ந்து நீதிபதி ஜெயபால், பாலியல் பலாத்கார முயற்சியில் சமரசமாக செல்கிறோம் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே வழக்கை ரத்து செய்ய முடியாது. வழக்கை ஜனவரி 23ஆம் தேதிக்கு தள்ளி வைக்கிறேன் என்று நீதிபதி உத்தரவிட்டார்.