தயாரிப்பாளர் அசோக் அமிர்தராஜ் தயாரிக்கும் ஹாலிவுட் படத்தில் இந்தியப் பெண்ணாக ஸ்ரேயா நடிக்கிறார்.
இயக்குனர் ஷங்கர் இயக்கிய ஜீன்ஸ் படத்தை தயாரித்தவர் அசோக் அமிர்தராஜ். இவர் சில ஹாலிவுட் படங்களை தயாரித்துள்ளார். தற்போது 'தி அதர் என்ட் ஆப் தி லைன்' என்ற ஹாலிவுட் படத்தை தயாரிக்கிறார்.
இந்த படத்தை ஜேம்ஸ் டாட்சன் என்பவர் இயக்குகிறார். 'ஜான் மஸ்ட் டை, டெஸ்பரேட் ஹவுஸ் ஒய்ப்ஸ் ஆகிய ஆங்கில படத்தில் நடித்துள்ள ஜெஸ்ஸி மெட்கேல்ப் கதாநாயகனாக நடிக்கிறார்.
சிவாஜி படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்த ஸ்ரேயா இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இது குறித்து நடிகை ஸ்ரேயா கூறுகையில், ஒவ்வொரு நடிகர், நடிகைகளின் வாழ்க்கையிலும் மிகப்பெரிய வாய்ப்பாக கருதப்படுகிறது ஹாலிவுட் படம் தான். அந்த வாய்ப்பு இவ்வளவு சீக்கிரத்தில் எனக்கு கிடைக்கும் என்று நான் கனவில் கூட எதிர்பார்க்கவில்லை என்றார்.
'சிவாஜி' படத்தில் ரஜினி சார் ஜோடியாக நடித்தபின், நான் நினைத்துப் பார்க்காத வாய்ப்புகள் எல்லாம் வந்து கொண்டிருக்கிறது. அந்த அதிர்ஷ்டம் ஹாலிவுட் படம் வரை தொடர்வதாக கருதுகிறேன். இந்த அரிய வாய்ப்பை நான் முழுமையாக பயன்படுத்திக் கொள்வேன். என் திறமை முழுவதையும் அந்த படத்தில் காட்டுவேன் என ஸ்ரேயா கூறினார்.
நான் இந்திய பெண்ணாக ஹாலிவுட் படத்தில் நடிக்கிறேன். மும்பையில் உள்ள ஒரு கால் சென்டரில் வேலை செய்கிறேன். அப்போது, அமெரிக்காவில் உள்ள ஜெஸ்ஸியுடன் தொலைபேசி மூலம் நட்பு கிடைக்கிறது. பின்னர் அவரை சந்திப்பதற்காக அமெரிக்கா செல்கிறேன். அப்போது அங்கு நடைபெறும் சம்பவங்களே படத்தின் கதை என்று ஸ்ரேயா தெரிவித்தார்.