தயாரிப்பாளர் கேயார் மீது தனுஷ் நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்திருப்பது தெரிந்ததே. ஆனால் "பரட்டை என்கிற அழகு சுந்தரம்" படத்தில் நடிக்க தனுஷுக்கு வெறும் ஒரு கோடி சம்பளம் மட்டுமே பேசப்பட்டது என்கிறாராம் தயாரிப்பாளர்.
இதுவரை 88 லட்சம் தனுஷுக்கு சம்பளம் கொடுத்தாகிவிட்டது. அதன்படி மீதம் 12 லட்சம் தான் பாக்கி உள்ளது. ஆனால் தனுஷ் தரப்பில் ஒன்றரை கோடி சம்பளம் என்று சொல்லி புகார் கொடுத்திருக்கிறார்கள்.
கன்னடத்திலிருந்து இப்படத்தின் தமிழ் உரிமையை 1 கோடி கொடுத்து வாங்கியிருக்கிறார் கேயார். அதேபோல் போன வருடம் ஜீன் மாதம் படப்பிடிப்பு தொடங்க வேண்டியது. இதற்கிடையில் "திருவிளையாடல்" படத்திற்காக தங்கள் படத்தின் கால்ஷீட்டை விட்டுக் கொடுத்தாராம் கேயார்.
"படத்தை அப்போது ஆரம்பித்திருந்தால் டிசம்பரில் படம் வெளியாகியிருக்கும். பிரச்சனை இருந்திருக்காது. தாமதமானதால் பைனான்ஸியருக்கு வீணாக வட்டி கட்ட வேண்டியிருக்கிறது. தயாரிப்புச் செலவும் அதிகமாகிப் போனது. இதில் திடீரென்று தனுஷ் சம்பளத்தை உயர்த்தி புகார் அளித்திருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது" என்கிறார் கேயார்.
நடிகர் சங்கத்திலும் தயாரிப்பாளர் சங்கத்திலும் பஞ்சாயத்து நடந்து கொண்டிருக்கிறது முடிவு தெரியவில்லை.