பருத்தி வீரன் படத்தின் படப்பிடிப்பு நடக்கும் போதே நம்மூர் தியேட்டருக்கு என ஒரு வெர்ஷனும் பட விழாக்களுக்கு என இன்னொரு வெர்ஷனும் எடுத்திருக்கிறார் இயக்குனர் அமீர்.
காரணம்.. உள்ளூரில் வெளியாகிற படத்துக்கு சென்ஸார் ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை வைத்திருக்கிறது. அதே படம் படவிழாக்களுக்கு போகும் போது புரியாமல் போகிற ஆபத்தை ஏற்கனவே தன்னோட ராம் படத்தின் மூலம் அனுபவித்தவர் அமீர்.
அங்கே உள்ள ஜூரிகளிடம் பேசிய போது படவிழாவுக்கு என தனியாக சென்ஸார் வாங்கி அனுப்புங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள்.
அதன்படி பருத்திவீரன் படத்தை எடுக்கும் போது சில காட்சிகளை விலாவாரியாகவும் வசனங்களை இன்னும் அழுத்தமாகவும் எடுத்து அதற்கென தனியாக சென்ஸாரிடம் சான்றிதழும் வாங்கி வைத்திருக்கிறார்.
அது தெரியாமல் கேன்ஸ் படவிழாவுக்கு இங்கே வெளியான பட பெட்டியை போட்டு அனுப்பி விட்டார்களாம் தயாரிப்பாளர் தரப்பு! ஒரு இயக்குனரின் படைப்பு எப்படியெல்லாம் இருட்டடிப்பு செய்யப்படுகிறது பாருங்கள்!?