அஜித் ரசிகர்கள் ரஜினி மாதிரி. எங்கிருக்கிறார்கள், என்ன செய்கிறார்கள் எதுவும் தெரியாது. ஆனால் படம் வெளியாகிற அன்று தியேட்டரை திணறடித்துவிடுவார்கள். மன்றமே வேண்டாம் என்று அஜித் கலைத்த பிறகும் நெஞ்சம் இனிக்க கொடி கட்டுகிறார்கள் என்றால் கொடுத்து வைத்தவர் அஜித்தான். இனி ஓவர் டு வீரம்.
FILE
ஒட்டன் சத்திரம் கிராமத்தில் தம்பிகள் நான்கு பேருடன் தாடியும் மீசையும் தடாலடி நடவடிக்கையுமாக வாழ்கிறவர் அஜித். வழியே போகிற வம்பையும் தேடிப்போகிற தெனாவெட்டு பார்ட்டிகள் இந்த பஞ்ச பாண்டவர்கள். மனைவி என்று ஒருத்தி வந்தால் இந்த சகோதர நெருக்கம் சடுதியில் காணாமல் போகும் என்று திருமணமே கூடாது என்று சபதமெடுத்தவர்கள்.
பெண் விஷயத்தில் தவ முனிவர்களே தடுமாறும்போது இந்த ஐம்பெரும் தாடிகள் எம்மாத்திரம்? தம்பிகளில் இருவருக்கு காதல் வருகிறது. அண்ணனை யாராவது ஒரு பெண் கவிழ்த்தால்தான் தங்களின் காதல் கைகூடும் என்று கோயில் ஆராய்ச்சிக்கு வரும் கோப்பெருந்தேவியை (தமன்னா) அஜித்துடன் கோர்த்துவிடுகிறார்கள். அவரும் ஆசையோடு விழுந்துவிடுகிறார் தேவியிடம்.
FILE
அண்ணன் தம்பிகள் ஆல்டைம் சண்டியர்கள் என்பது அறியாமல் தமன்னாவும் அஜித்தை காதலிக்கிறார். கான்ட்ராஸ்ட் என்னவென்றால் அஜித் அடிதடி விஷயத்தில் ஒரிஜினல் முனியாண்டி விலாஸ் என்றால் தமன்னா உயர்தர சைவம்.
இந்த கவுச்சி மேட்டர் தமன்னாவுக்கு தெரிய வருகிறது. சிலபல சமாதானங்களுக்குப் பிறகு தமன்னாவின் ஊருக்கு சென்று அவரின் அப்பா நாசரை சமாதானப்படுத்துகிறார் அஜித். அவரும், திருவிழா முடியும்வரை ஊரில் தங்கியிருக்க சொல்ல, அண்ணன் தம்பிகளும் அப்படியே செய்கிறார்கள்.
FILE
இந்நிலையில் ஒரு கோஷ்டி இவர்களை போட்டுத் தள்ள முயல்கிறது. பிறகுதான் அவர்கள் தங்களை தாக்க வந்தவர்கள் இல்லை அவர்களின் குறி நாசரின் குடும்பம் என்பது தொpய வருகிறது. அவர்கள் யார்? எதற்காக கொலை செய்ய முயற்சிக்க வேண்டும்? நாசர் குடும்பத்துக்கு தெரியாமல் அண்ணன் தம்பிகள் எப்படி எதிரிகளை முறியடிக்கிறார்கள்?
தெலுங்கு சினிமாவில் புழங்கியதால் கரம் மசாலா விஷயத்தில் இயக்குனர் சிவா இன்னொரு நளன். மாஸ் கதையில் காமெடி, சென்டிமெண்ட், காதல், ஆக்ஷன் அனைத்தையும் சரி விகிதத்தில் கலந்து சிறந்ததொரு குடும்பப் படத்தை தந்திருக்கிறார் என்பது அஜித் ரசிகர்களின் கருத்து.
FILE
கடந்த சில படங்களில் அஜித்தை கோட்டில் பார்த்தே கேடாகிப் போன கண்களுக்கு வெள்ளரிக்காயை வெட்டி வைத்த குளிர்ச்சியை அஜித்தின் வேட்டி சட்டை காஸ்ட்யூம் தந்திருப்பதை ரசிகர்களின் பேச்சில் யூகிக்க முடிகிறது. முதல் பாதியில் அலப்பறையான அடிதடி, சந்தானத்தின் காமெடி, அஜித்தை கவிழ்க்கப் போடும் ஜிலுஜிலு பிளான் என்று படம் பறக்கிறது.
இரண்டாவது பாதியில் சென்டிமெண்ட், குடும்பம், சிக்கல் என்று இன்னொரு பரிமாணம். அஜித் படங்களில் இதுவொரு சிக்ஸர் என்பது படம் பார்த்த ரசிகர்களின் அபிப்ராயம். சந்தானத்தின் காமெடி இந்தப் படத்தில் எடுபட்டிருப்பது இன்னொரு ப்ளஸ்.
FILE
பொதுவான ரசிகர்களுக்கும் இதில் பெரிதாக மறுப்பில்லை. ஓபனிங்கில் ஒப்பீட்டளவில் வீரத்தைவிட ஜில்லாவுக்குதான் ஆதரவு அதிகம். திரையரங்கும் ஜில்லாவுக்கே கூடுதல். ஆனால் முதல் ஷோவுக்குப் பிறகு வீரம் பிக்கப்பானதாக துபாய் ரசிகர் ரத்தினவேலு தனது ப்ளாக்கில் தொpவித்திருக்கிறார். இதே கருத்தைதான் மற்ற ரசிகர்களும் கூறுகிறார்கள்.
குடும்பத்துடன் பார்க்கிற என்டர்டெய்னர் என்ற பெயரை எப்படியோ சம்பாதித்துவிட்டதால் வீரம் காட்டில் அடை மழை நிச்சயம்.