ரஜினியின் மேல்படிப்பு திட்டம்?

``எப்போ வருவேன்; எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது. ஆனா வரவேண்டிய நேரத்தில கண்டிப்பா வருவேன்''.

``என்ன கண்ணா, இப்ப புரியுதா? இது எப்படி இருக்கு?
ஹவ் இஸ் இட்?''

``மீண்டும் ஒருமுறை நீங்க, இந்தக் கூட்டணிக்கு (!?) வாக்களிச்சா, தமிழ்நாட்டை அப்புறம் அந்த ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது''

அதாங்க, இதெல்லாம் நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது படங்களிலும், ஒரு தேர்தலின் போது சொன்ன வாய்ஸ்.

இப்போ புதுசா ஒரு ஸ்டேட்மெண்ட தனது ரசிகர்களைக் கூட்டி அவர்கள் மத்தியில் வெளியிட்டுள்ளார்.

``நான் அரசியலுக்கு வருவது பற்றி ஆண்டவன் தான் முடிவு செய்ய வேண்டும். என் கையில் ஒன்றும் இல்லை. அரசியலுக்கு வர வேண்டும் என என்னை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. அந்த உத்தரவு கடவுளிடம் இருந்து தான் வர வேண்டும். அப்படி உத்தரவு கிடைத்து விட்டால், நான் அரசியலுக்கு வருவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது'' - இதுதாங்க இப்போ ரொம்ப லேட்டா ரஜினி வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் ஸ்டேட்மெண்ட்.

இதன்மூலம் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை ரசிகர்களே தெரிந்து கொண்டார்களா, இல்லையா? என்பது தெரியவில்லை. எதற்காக இந்த ஹைஃப், பரபரப்பு, ஊடக ஒளிபரப்பு? என பலர் கேள்வி எழுப்புகிறார்கள்.

ஒரு மாணவன் 12ஆம் வகுப்பு முடித்து நல்ல மதிப்பெண் வாங்கி, மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் பெற்றுள்ளான். அவனுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் அவன் கேட்கும் விருப்பப் பாடத்துடன் உயர் கல்விக்கு அழைப்பும் வந்துள்ளது. டாக்டர் படிப்பிற்கு மிகச்சிறந்த மருத்துவக் கல்லூரியிலும் இடம் கிடைத்துள்ளது என்று வைத்துக் கொள்வோம்.

அந்த மாணவனோ அல்லது அவனது பெற்றோரோ, உடனடியாக முடிவெடுக்க வேண்டும். அந்த முடிவு, இதுவா, அதுவா? என்பதை எடுத்தவுடன் பி.இ அல்லது எம்.பி.பி.எஸ் என்று கூறி, கல்விக் கட்டணத்தைச் செலுத்து உயர் கல்வியைத் தொடரவேண்டும்.

மாறாக அம்மாணவன், நான் உயர் கல்வி படிக்க வேண்டிய நேரத்திலே கட்டாயம் படிப்பேன். ஆண்டவன் சொன்னால் தனது மேல்படிப்பைத் தடுக்க யாராலும் முடியாது என்று கூறிக் கொண்டு இருந்தால் எப்படி இருக்கும்? அதைப் போலத்தான் ரஜினியின் நேற்றைய அறிவிப்பும் உள்ளது.

ஏறக்குறைய 30 ஆண்டுகளாக தமிழ்த் திரையுலகில் இருந்து வரும், சூப்பர்ஸ்டார் என்ற நம்பர் ஒன் அந்தஸ்தைப் பெற்றுள்ள ஒரு நடிகர், தனது அரசியல் பிரவேசத்தை அறிவிக்க வேண்டும் என்று பெரும்பாலான ரசிகர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே இரண்டொரு தேர்தல்களில் வாய்ஸ் வேறு கொடுத்துள்ளார். (ஒரு முறை வாய்ஸ் எடுபடாமல் போனது வேறு விஷயம்).

நடிகர்கள் நாடாளக்கூடாது என்றால் அது அபத்தமாகி விடும். அதிலும் எம்.ஜி.ஆர், கருணாநிதி ௦(தற்போதைய முதல்வர்), ஜெயலலிதா போன்றோர் தமிழகத்தில் முதல்வர் பதவி வகித்துள்ளனர் எனும்போது, நடிகர் தவக்களைக்கு கூட முதல்வர் பதவி மீது ஒரு கண் இருப்பதில் ஆச்சர்யம் ஏதுமில்லை.

மற்றொரு நடிகர் கறுப்பு எம்.ஜி.ஆர் என்று கூறிக் கொண்டு, புதிய கட்சியை ஆரம்பித்து கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்து 234 தொகுதியிலும் போட்டியிட்டு, தான் மட்டும் வென்று எம்.எல்.ஏ-வாகியுள்ளார்.

மக்கள் தான் தனது கூட்டணி என்று வாய் நிறைய கூறிவந்த தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த், இப்போதே கூட்டணிக்கான கதவுகளை கடைவிதித்துள்ளார்.

ஒருவகையில் அவரைப் பாராட்டலாம். புலி வருது, புலி வருது என்று கதையெல்லாம் இல்லாமல், அரசியலுக்கு வருவேன் என்ற தீர்மானத்துடன் வந்து கட்சியையும் நடத்தி வருகிறாரே? தேர்தல், கூட்டணி, வெற்றி, தோல்வி என்பதெல்லாம் இரண்டாம்பட்சம்.

மற்றொரு நடிகரான சுப்ரீம் ஸ்டார் சரத்குமார், முக்கிய இரு திராவிய இயக்கங்களிலும் இருந்து, பதவி வகித்த பின், தமிழகத்தின் சாபக்கேடான ஜாதி அரசியலை மனதில் கொண்டோ என்னவோ, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்ற பெயரில் கட்சி தொடங்கி விட்டார்.

அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் தலைவராக இருந்து, வெளியேற்றப்பட்ட நடிகர் கார்த்திக், நாடாளும் மக்கள் கட்சி என்ற கட்சியைத் தொடங்கி விட்டார்.

இந்த நடிகர்களுக்கு உள்ள தைரியம் கூடவா சூப்பர் ஸ்டாருக்கு இல்லை? அல்லது எனது வாழ்வில் அரசியல் கட்சி என்பது கிடையாது. நான் ஒருபோதும் அரசியலுக்கு வர மாட்டேன். சினிமாவில் மட்டுமே இருப்பேன் என்று திடமாகக் கூறி விடலாம். இல்லையேல் ஒரு முடிவெடுத்து, அடுத்த ஆண்டு அல்லது குறிப்பிட்ட ஒரு தேதியில் அரசியல் கட்சி தொடங்க உள்ளேன். ரசிகர்கள் தயாராக இருங்கள் என்று கூறி விடலாம்.

ரஜினியின் அறிவிப்பை பார்க்கும் போது, வடிவேலுவின் நகைச்சுவைதான் நினைவுக்கு வருகிறது.

``வருவேன்..... ஆனா வரமாட்டேன்'' என்பது போல் உள்ளது.

சூப்பர்ஸ்டாரின் நண்பரும், ஆந்திராவின் சூப்பர்ஸ்டாருமான சிரஞ்சீவி ஒரு முடிவெடுத்தார். உடனே மக்களையும், ரசிகரையும் திரட்டினார். `பிரஜா ராஜ்யம்' கட்சியைத் தொடங்கி விட்டார்.

தேர்தலில் கூட்டணி, வெற்றி, தோல்வி என்பதெல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம்.

எனவே மீண்டும் மீண்டும், ரசிகர்களையும், மக்களையும் குழப்பாமல், ஒரு தெளிவான முடிவை எடுத்து, அதனை வெளிப்படையாக அறிவிக்கட்டும்.

லாபமோ, நஷ்டமோ உயர் கல்வியைத் தொடர மாணவன் தயாராகட்டும். பிளஸ்-2வில் முதலிடம் பிடித்த மாணவனுக்கு உயர் கல்வி கை கொடுக்கிறதா? அல்லது கை விடுகிறதா? என்பதை ஆண்டவனா முடிவு செய்யப் போகிறான்.

இப்படியே குழப்பத்தில் மாணவன் இருப்பாரேயானால், அவர் மேல்படிப்பு படித்து முடித்து விட்டு, ஒரு டாக்டராகவோ அல்லது என்ஜினியராகவோ வந்து நாட்டுக்கு என்ன நல்லது செய்து விடப் போகிறார்?

வெப்துனியாவைப் படிக்கவும்