புத்தக வர்த்தகத்தில் சினிமா!
தொண்ணூறுகளின் இறுதிவரை சினிமா குறித்த தனித்த புத்தகங்கள் தமிழில் குறைவு. திரைக்கதை எப்படி எழுதுவது என்பதை தெரிந்து கொள்ள நீங்கள் ஆங்கிலப் புத்தகத்தைதான் தேடிப் போக வேண்டும். உலக சினிமா குறித்து அறிய, எப்போதாவது அயல்நாட்டு திரைப்படங்களை திரையிடும் ICAF போன்ற தனியார் அமைப்புகள்தான் ஒரே வழி.
இன்று நிலைமை மாறியிருக்கிறது. சினிமா குறித்த ஏராளமான புத்தகங்கள் தமிழில் வெளிவருகின்றன. தமிழ் புத்தக வர்த்தகத்தில் சினிமா புத்தகங்கள் கணிசமான இடத்தை பிடித்துள்ளன. நடந்து முடிந்த 31வது சென்னை புத்தகக் கண்காட்சியில் இதனை உணர முடிந்தது.
புத்தகக் காட்சியையொட்டி ஏராளமான திரைப்படம் சார்ந்த புத்தகங்கள் வெளியிடப்பட்டன. உயிர்மை, காலச்சுவடு, தென்திசை, வம்சி, கழிக்குப் பதிப்பகம், நக்கீரன் என ஏராளமான பதிப்பகங்கள் திரைப்படம் சார்ந்து அதிக எண்ணிக்கையில் புத்தகங்களை வெளியிட்டன.
'கல்லூரி' படத்தின் ஒளிப்பதிளாளரும் விமர்சகருமான செழியன் எழுதிய சினிமா குறித்த விமர்சன கட்டுரைகள் தொகுக்கப்பட்டு புத்தகமாக வந்துள்ளது. இவரது எழுத்தில் வந்துள்ள இன்னொரு புத்தகம் 'உலக சினிமா'.
இயக்குனர் வஸந்த், விக்ரமன் இயக்கிய திரைப்படங்களின் திரைக்கதையை போதி பதிக்ககம் வெளியிட்டுள்ளது. காவ்யா பதிப்பகம் தங்கர் பச்சானின் 'அழகி' திரைக்கதையையும், அன்னம் பதிப்பகம் 'ஒன்பது ரூபாய் நோட்டு' திரைக்கதையையும் வெளியிட்டுள்ளன.
தியோடர் பாஸ்கரனின் 'எம் தமிழர் செய்த படம்' மற்றும் திருநாவுக்கரசின் 'சொல்லப்படாத சினிமா' இரண்டும் மிக முக்கியமானவை. ஆராய்ச்சி நோக்கில் எழுதப்பட்டவை.
இந்தியாவில் திரை மறுமலர்ச்சியை உருவாக்கிய ரேயின் 'பதேர் பாஞ்சாலி' குறித்து எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியிருக்கும் புத்தகம், ஒரு திரைப்படத்தை எப்படி அணுகுவது என்பதை விளக்கிச் செல்கிறது.
இந்த வருடத்தின் முக்கியமான புத்தகங்களில் ஒன்று சுஜயன் பாலா எழுதிய 'திரைப்பட வரலாறு மெளனயுகம்' மெளனப்பட காலத்தில் முயற்சிகளை, திரைப்படம் தோன்றியதில் இருந்து படிப்படியாக அது வளர்ந்த விதத்தை படங்களுடன் விளக்குகிறது இப்புத்தகம்.
மற்றொரு முக்கிய வரவு, எஸ் ராமகிருஷ்ணனின் 'அயல் சினிமா'. குவென்டின் டெரான்டினோ, வாங் கர் வாய், வால்டர் செலஸ், ஷாங் இழு, டொர்னாடோ குசாபே, பெட்ரோ அல்மதோவர், அலெக்சாண்டர் சுக்ரோவ், ஜேன் கேம்பியான், பூன் பியாதே ஜெனட், கிம் கி டக் ஆகிய பத்து இயக்குனர்கள் பற்றியும் அவர்கள் படங்கள் குறித்தும் இப்புத்தகம் பேசுகிறது.
இந்த இயக்குனர்கள் சீனா, கொரியா, ரஷ்யா, அமெரிக்கா, இத்தாலி, பிரேசில், நியூஸிலாந்து, அர்ஜென்டினா, பிரான்ஸ் என உலகின் பல்வேறு நிலப்பரப்பை சேர்ந்தவர்கள். தங்கள் நிலப்பரப்பின் கலையை, கலாச்சாரத்தை. பிரச்சனைகளை எவ்வித சமரசமும் இன்றி கலாபூர்வமாக முன் வைப்பார்கள், கேன்ஸ், பெர்லின் உள்ளிட்ட முக்கியமான திரைப்பட விழாக்களில் இவர்களது படங்கள் தொடர்ந்து கவனம் பெற்று வருகின்றன.
ஹாலிவுட் இயக்குனர் குவென்டின் டெரான் டினோவின் திரைக்கதையில் உருவான 'Palp Fiction' அதன் திரைக்கதைக்காக இன்றும் கொண்டாடப்படுகிறது. கான்ஸ், ஆஸ்கார் உள்ளிட்ட விருதுகளை இப்படம் பெற்றது.
ஹாங்காங்கைச் சேர்ந்த வாங் கர் வாய் ’In the mood for Love, '2006' படங்களின் வாயிலாக ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்டவர். மனித உறவுகள் குறித்த ஆழ்ந்த பரிசோதனையை முன்னிறுத்துபவை இவரது படங்கள்.
உலக புரட்சியாளர் சே குவேரா தனது 23வது வயதில் தனது நண்பனுடன் சேர்ந்து மேற்கொண்ட மோட்டார் சைக்கிள் பயணம் பிரசித்தமானது. அவரது டைரிக் குறிப்பை ஆதாரமாகக் கொண்டு 'மோட்டார் சைக்கிள் டயரீஸ்' படத்தை இயக்கி உலகப் புகழ் பெற்றவர் வால்டர் செலஸ்.
சீனாவின் ஐந்தாம் தலைமுறை இயக்குனர்களில் முக்கியமானவர் ஷாங் இமு. 'ரோடு ஹோம், நாட் ஒன் லெஸ் போன்ற மென்மையான திரைப்படங்களை இயக்கிய ஷாங் இமு, ஹாலிவுட் சென்று 'ஹீரோ', 'ஹவுஸ் ஆஃப் பிளையிங் டேகர்ஸ்' போன்ற சாகசப் படங்களை இயக்கி அங்கும் தடம் பதித்து வருகிறார்.
இத்தாலி இயக்குனர் டொர்னாடோ குசாயின் 'cinema Paradiso', 'Malena', 'Star maker' உள்ளிட்ட படங்கள் காலத்தால் அழியாதவை.
இப்படி ஒவ்வொரு மொழியிலும் சிறந்த பத்து இயக்குனர்களை அவர்களின் பிராந்தியம் மற்றும் படங்களின் பின்னணி சார்ந்து விளக்கிச் செல்வதன் ஊடாக சமகால உலக சினிமாவின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை நமக்கு காட்டுகிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.
இந்த புத்தகங்களின் வரவு வர்த்தகத்தில் மட்டுமின்றி ரசனையிலும், திரைக்கதையிலும் அழுத்தமான சுவடை பதித்துள்ளது. 'தமிழில் ஒரு ஈரானிய சினிமா', ' தமிழில் ஒரு உலக சினிமா' என்பதான தமிழ்ப் படங்களின் விளம்பரங்கள் இந்த பாதிப்பின் பிரதிபலிப்பே தவிர வேறில்லை!