அர்ஜூன் டெண்டுல்கர் வந்த நேரமா? மீண்டெழும் பல்தான்ஸ்! – அதிரடி சரவெடி!
புதன், 19 ஏப்ரல் 2023 (08:36 IST)
இந்த சீசன் தொடங்கியது முதலே சுமாராக ஆடி வந்த மும்பை இந்தியன்ஸ் கடந்த சில போட்டிகளாக கலக்கி வருகிறது.
ஐபிஎல் லீக் போட்டிகள் களைகட்டியுள்ள நிலையில் பெரும்பாலான ரசிகர்களால் உற்றுநோக்கப்படும் போட்டிகளில் சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி போன்ற அணிகளின் போட்டிகள் முக்கியமானவை. கடந்த சில போட்டிகளில் சொதப்பி வந்த மும்பை இந்தியன்ஸ் அணி மீண்டும் வீறு கொண்டு எழுந்துள்ளது.
நேற்று நடந்த சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் – மும்பை இந்தியன்ஸ் இடையேயான போட்டி மும்பை அணிக்கு ஒரு டீசண்டான வெற்றியை கொடுத்துள்ளது. முதலில் பேட்டிங் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் நிதானமாகவே விளையாட முயன்றது. ரோஹித் ஷர்மாவும், இஷான் கிஷனும் ஓப்பனிங் இறங்கி பவுண்டரிகளும் சிக்ஸர்களுமாக விளாசி தள்ளியபோதே “இன்னைக்கு ஆட்டம் எங்களுது” என மும்பை ரசிகர்கள் மார்த்தட்டிக் கொண்டனர்.
ஆனால் அந்த வேகம் குறைவதற்குள் 5வது ஓவரிலேயே நடராஜன் வீசிய பந்தில் எய்டன் மக்ரம் கேட்ச்சில் அவுட் ஆனார் ரோஹித். ”ஆனாலும் என்ன கேட்டு போச்சு அதான் நான் இருக்கேனே” என்று களமிறங்கிய கேமரூன் க்ரீன் அன்றைக்கு ஆட்டத்தை முழுவதும் எடுத்துக் கொண்டார் என்றே சொல்லலாம். 2 சிக்ஸர்கள் 6 பவுண்டரிகளை தட்டித்தூக்கிய கேமரூன் க்ரின்40 பந்துகளில் 64 ரன்களை குவித்தார். கடைசி வரை அவுட் ஆகாமல் களத்தில் நின்றார்.
11வது ஓவரில் இஷான் கிஷன் மீண்டும் எய்டன் மக்ரமிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆக அடுத்து சூர்யகுமார் இறங்கினார். கடந்த சில போட்டிகளாகவே மோசமான ஆட்டத்தை கொடுத்து வரும் சூர்யகுமார் இந்த முறையும் அதையே செய்துள்ளார். உள்ளே வந்த வேகத்தில் அவர் அடித்து தூக்கிய சிக்ஸர் பலரையும் வாய்பிளக்க வைத்தது. “பழைய சூர்யகுமார் வந்துட்டார்” என ரசிகர்கள் மகிழ்ச்சியில் துள்ளாட்டம் போடுவதற்குள் மீண்டும் ஒரு சிக்ஸர் அடிக்க முயன்று கேட்ச்சுக்காகவே காத்துக் கிடக்கும் எய்டன் மக்ரமிடம் கேட்ச்சை கொடுத்து 7 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். பின்னர் வந்த திலக் வர்மா (37), டிம் டேவிட் (16)என டீசண்டாக ஸ்கோர்களை தர அணியின் ஸ்கோர் 192 ஆக உயர்ந்து இலக்கு 193 ஆக அமைந்தது.
மும்பை இந்தியன்ஸுக்கு அடுத்து இருந்த பிரச்சினை பவுலிங்தான். ஆரம்பம் முதலே அணியின் பவுலிங் கொஞ்சம் சுமாராக இருந்து வந்த நிலையில் பியூஷ் சாவ்லா, கேமரூன் க்ரீன், மெரிடித் போன்றவர்கள் மேல் ஒரு நம்பிக்கை இருந்தது. சச்சினின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் பவுலிங்கில் இருந்தாலும் விக்கெட் எதுவும் வீழ்த்தாமல் இருந்தார்.
இரண்டாவது ஓவரிலேயே ஹாரி ப்ரூக்கை தட்டி தூக்கினாலும் மயங்க் அகர்வால் நின்று விளையாடி 48 ரன்கள் வரை ஸ்கோர் செய்தார். ஆனால் அதற்கும் 41 பந்துகளை செலவழித்ததால் அணி பின்னடைவை சந்தித்தது. அடுத்தடுத்து வந்த ராகுல் த்ரிபாட்டி (7), அபிஷேக் சர்மா (1) என மோசமான தோல்வியை தழுவினார்கள். இடையே விளையாடி மக்ரம் (22), க்ளாசென் (36) மட்டும் அணியை கொஞ்சம் முன் நகர்த்தியது.
ஆனால் அதற்கு கிட்டத்தட்ட ஓவரும் முடிந்துவிட்டது, விக்கெட்டும் முடிந்து விட்டது. சச்சின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் உள்ளே வந்த ராசிக்கு புவனேஷ்குமார் விக்கெட்டை தூக்கினார். இதனால் சன்ரைஸர்ஸ் அணி அனைத்துவிக்கெட்டுகளையும் 19.5 ஓவர்களில் இழந்து 178 ரன்களுக்கு தோல்வியை தழுவியது.
ஆனால் மும்பை இந்தியன்ஸுக்கு இது தொடர்ந்து 3வது வெற்றி. ஹாட்ரிக் வெற்றியை கொண்டாடி வரும் மும்பை இந்தியன்ஸ் அடுத்தடுத்த போட்டிகளிலும் தனது திறமையை காட்டுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.