இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நடைபெற்று வரும் இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வலுவான நிலை நோக்கி நகர்ந்துள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 180 ரன்கள் ஆட்டம் இழந்தது. இதனை அடுத்து ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் என்ற நிலையில் நேற்றைய ஆட்டம் முடிந்தது.
இன்று இரண்டாவது நாள் ஆட்டத்தை ஆடிவரும் ஆஸ்திரேலிய அணி மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அந்த அனியின் நடுவரிசை பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடி சதமடித்துள்ளார். 119 பந்துகளில் 112 ரன்கள் சேர்த்து களத்தில் விளையாடி வருகிறார். அவரின் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் இந்திய பவுலர்கள் தடுமாறி வருகின்றனர். தற்போது வரை 5 விக்கெட்களை இழந்து 270 ரன்கள் சேர்த்துள்ளது ஆஸ்திரேலிய அணி.
இந்த இன்னிங்ஸில் 58 ஆவது ஓவரை அஸ்வின் வீசிய போது அந்த பந்தை காலில் வாங்கினார் மிட்செல் மார்ஷ். அதற்கு எல் பி டபுள் யு முறையில் அப்பீல் செய்ய கள நடுவர் அவுட் இல்லை என அறிவித்தார். அதனால் மூன்றாவது நடுவரிடம் அப்பீல் செய்தனர். அவர் பந்து காலில் பட்டதா பேட்டில் பட்டதா என சரியாக யூகிக்க முடியாததால் நாட் அவுட் என அறிவித்தார். ஆனால் மறு ஒளிபரப்பில் பந்து கால்காப்பில் முதலில் பட்டது தெளிவாக தெரிந்தது. இதனால் இந்திய அணியினர் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தினர்.