வெஸ்ட் இண்டீஸ் - நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டியின் சாதனைகள்
ஞாயிறு, 22 மார்ச் 2015 (18:33 IST)
சனிக்கிழமை [21-03-15] நடைபெற்ற நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையே நேற்று நடந்த 4ஆவது மற்றும் இறுதி காலிறுதிப் போட்டியில் ஏகப்பட்ட சாதனைகள் நிகழ்த்தப்பட்டன.
சாதனைகள் கீழே:
உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை குவித்த மார்டின் கப்தில் (237 ரன்கள்), கிறிஸ் கெய்லிடம் (215 ரன்கள்) இருந்து தட்டிப்பறித்தார். அத்துடன் உலகக் கோப்பை நாக்-அவுட் சுற்று ஆட்டம் ஒன்றில் அதிக ரன்கள் எடுத்தவரான ஆஸ்திரேலியாவின் கில்கிறிஸ்டின் (149 ரன்கள்) சாதனையையும் கப்தில் முறியடித்துள்ளார்.
உலக கோப்பை நாக்-அவுட் சுற்றில் ஒரு அணியின் அதிகபட்ச ரன் குவிப்பாக நியூசிலாந்து திரட்டிய 393 ரன்கள் அமைந்தது. இதற்கு முன்னதாக 2003ஆம் ஆண்டு உலகக் கோப்பை இந்தியாவுடனான இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 359 ரன்கள் குவித்திருந்ததே அதிகப்பட்சமாகும்.
இந்த ஆட்டத்தில் 96 ரன்களை விட்டுக்கொடுத்த வெஸ்ட் இண்டீசின் ஆண்ட்ரே ரஸ்செல், உலக கோப்பை நாக்-அவுட் சுற்றில் அதிகமான ரன்களை விட்டுக்கொடுத்த மோசமான பவுலர் என்ற பெயரை பெற்றார்.
ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் வெஸ்ட் இண்டீஸ் அணி 300-க்கும் மேற்பட்ட இலக்கை இதுவரை ஒருமுறைகூட துரத்திப்பிடித்து வெற்றிபெற்றது கிடையாது. அந்த வரலாறு நேற்றையப் போட்டியிலும் தொடர்ந்தது.
இந்த உலக கோப்பையில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியோர் பட்டியலில் நியூசிலாந்தின் டிரெண்ட் போல்ட் 19 விக்கெட்டுகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். ஆஸ்திரேலியாவின் ஸ்டார்க் (18 விக்கெட்), இந்தியாவின் முகமது ஷமி (17 விக்கெட்), வெஸ்ட் இண்டீசின் ஜெரோம் டெய்லர் (17 விக்கெட்) அடுத்த இடங்களில் உள்ளனர்.
நியூசிலாந்து அணியின் மொத்த ரன் (393) குவிப்பில், கப்திலின் பங்களிப்பு மட்டும் 60.5 சதவீதம் ஆகும். முழுமையாக நிறைவடைந்த ஒரு நாள் போட்டி இன்னிங்சில் அணியின் மொத்த ரன்னில் ஒரு வீரரின் பங்களிப்பு 60 சதவீதத்திற்கு மேல் இருப்பது இது 10ஆவது நிகழ்வாகும்.