ஐபிஎல் சீசனின் நேற்றைய பிற்பகல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதிக் கொண்டன. இதில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 161 ரன்களே எடுத்திருந்த நிலையில், சேஸிங் வந்த கொல்கத்தா அணி 15.4 ஓவர்களிலேயே 2 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களை குவித்து வெற்றியைக் கைப்பற்றியது.
இந்த போட்டியில் பேட்டிங் தொடங்கி ஃபீல்டிங் வரை லக்னோ அணி பல சொதப்பல்களை நிகழ்த்தியது. அதில் முக்கியமான ஒன்று வெஸ்ட் இண்டீஸ் ப்ளேயர் சமர் ஜோசப் செய்தது. இந்த சமர் ஜோசப் கடந்த ஜனவரி மாதம் நடந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஒரே ஆளாக நின்று 7 விக்கெட்டுகளை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸின் வெற்றிக்கு காரணமாக இருந்தவர்.
ஆனால் ஐபிஎல்லில் இவரது பந்துவீச்சு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தா அணிக்கு எதிராக லக்னோ பந்துவீச்சு தொடங்கியதும் முதல் ஓவர் சமர் ஜோசப்புக்கு தரப்பட்டது. எப்படியும் அவர் ஒரு விக்கெட்டாவது வீழ்த்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சமர் ஜோசப் முதல் ஓவரிலெயே 2 நோ பால், 2 வைட் என மொத்தம் 10 பந்துகளை வீசினார். மேலும் முதல் ஓவரிலேயே கொல்கத்தா 22 ரன்களை குவிக்க காரணமானார். மேலும் மொத்த போட்டியில் ஒரு விக்கெட் கூட அவர் எடுக்கவில்லை.
ஐபிஎல் வரலாற்றிலேயே முதல் ஓவரில் அதிகமான பந்துகள் வீசி, அதிக ரன்களை கொடுத்த மோசமான சாதனையை படைத்துள்ளார் சமர் ஜோசப். இவரா ஒற்றை ஆளாக நின்று ஆஸ்திரேலியாவின் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் லக்னோ ரசிகர்கள்.