ராஞ்சி டெஸ்ட்: போராடி டிரா செய்தது ஆஸ்திரேலிய அணி!
திங்கள், 20 மார்ச் 2017 (17:00 IST)
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ராஞ்சியில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியை ஆஸ்திரேலிய அணி போராடி டிரா செய்தது.
முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியும், இரண்டாவது போட்டியியில் இந்திய அணியும் வெற்றி பெற்றது. இதனையடுத்து மூன்றாவது டெஸ்ட்டில் வெற்றி பெற்றி முன்னிலை வகிக்க இரண்டு அணிகளும் மும்மரமாக களம் இறங்கியது.
முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 451 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அந்த அணியின் கேப்டன் ஸ்மித் 178 ரன்களும், மேக்ஸ்வெல் 104 ரன்களும் குவித்தனர். இந்தியா தரப்பில் ஜடேஜா 5 விக்கெட்டும், உமேஷ் யாதவ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் களம் இறங்கிய இந்திய அணி நிதானமாகி ஆடி அபாரமாக முதல் இன்னிங்சை முடித்தது. ராகுல் 67 ரன்னும், விஜய் 82 ரன்னும் அடித்து நல்ல தொடக்கத்தை கொடுக்க அதனை பயன்படுத்திக்கொண்ட புஜாரா இந்திய இன்னிங்சை சிறப்பாக கட்டமைத்தார், அவருக்கு விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா நல்ல ஒத்துழைப்பை வழங்கினார்.
இந்த கூட்டணி ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களை தினறடித்தது. புஜாரா 202 ரன்களும், சஹா 117 ரன்னும் குவித்து ஆட்டமிழந்தனர். பின்னர் களம் இறங்கிய ஜடேஜா அதிரடியாக இறுதி நேரத்தில் 54 ரன்கள் குவித்தார். இறுதியில் இந்திய அணி 9 விக்கெட்டை இழந்து 603 ரன்களுக்கு முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.
அதன் பின்னர் இரண்டாவது இன்னிங்சை 152 ரன்கள் பின் தங்கிய நிலையில் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி நான்காவது நாள் இறுதியில் 23 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்து தடுமாறியது. இதனையடுத்து ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 63 ரன்னில் 4 விக்கெட்டை இழந்து மேலும் தடுமாறியது.
இதனால் இந்தியா இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறும் சூழல் நிலைவியது. இதனால் தோல்வியை தவிற்க ஆஸ்திரேலிய அணி கடுமையாக போராடியது. மார்ஷ், ஹேண்ட்ஸ்கோம்ப் ஜோடி ஆமை வேகத்தில் ஆடி கடுமையாக போராடி விக்கெட்டை நிலை நிறுத்தி அணியை தோல்வியிலிருந்து மீட்டனர்.
இறுதியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் குவித்து போட்டியை சமனில் முடித்தது. இரண்டாவது இன்னிங்சில் ஜடேஜா 4 விக்கெட் வீழ்த்தினார்.