வன்னியில் 4 மாதத்தில் 6,432 தமிழர்கள் படுகொலை

இலங்கையின் வன்னி பகுதியில் நடப்பாண்டின் துவக்கம் முதல் ஏப்ரல் வரையிலான 4 மாத காலத்தில் மட்டும் சிறிலங்கப் படையினரால் 6,432 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா அறிக்கை தெரிவிப்பதாக இன்று செய்தி வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நெட் இணையதளத்தில் வெளியாகியுள்ள செய்தியில், ரகசியமாக கசிந்துள்ள ஐ.நா.வின் அறிக்கையில், நடப்பாண்டில் மட்டும் சிறிலங்க படையினரின் தாக்குதலில் 6,432 தமிழர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 13,496 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை கடந்த ஒரு வார காலமாக கொழும்பில் உள்ள தூதரக வட்டாரங்கள் இடையே பரிமாறப்பட்டு வந்துள்ளதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஆயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள் உயிரிழந்துள்ள நிலையில், அந்த எண்ணிக்கையும் இந்த அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளதா? இல்லையா? என்பது குறித்த விவரம் தெரியவில்லை.

இலங்கையில் போர் நடந்து வரும் பகுதியில் அப்பாவிப் பொதுமக்கள் தங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வலயப் பகுதிகள் மீது சிறிலங்கப் படையினர் எறிகணை, உந்துகணை, கொத்துக்குண்டு, ரசாயன குண்டுகளை வீசி ஈவு இரக்கமின்றி தாக்குதல் நடத்தி தமிழர்களை கொன்று குவித்து வருகிறது.

அப்பாவித் தமிழர்களைக் காப்பாற்ற ஐக்கிய நாடுகள் உட்பட சர்வதேச மனித உரிமை அமைப்புகள் முயற்சி மேற்கொள்ளாமல் மௌனம் காத்து வருவதால் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

ரகசியமாக வெளியாகியுள்ள இந்த அறிக்கையை பகிரங்கமாக வெளியிட ஐ.நா மறுத்து வருவதாகவும், இதுபற்றி உடனடிக் கருத்து எதையும் ஐ.நா. வெளியிடவில்லை என்றும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்