இலங்கையில் கொந்தளிப்புக்கு மத்தியில் ராணுவம் கட்டுப்பாட்டுடன் செயல்படக்காரணம் என்ன?
வியாழன், 28 ஜூலை 2022 (12:06 IST)
இலங்கையில் சுமார் 15 நாட்கள் நீடித்த அரசியல் குழப்பத்திற்குப் பிறகு புதிய அதிபர் பதவியேற்றுள்ளார். ஆனால் சில நாட்களுக்கு நாட்டிற்குள் நடந்த குழப்பங்களின் படங்களை உலகமே பார்த்தது.
13 ஆண்டுகளுக்கு முன்னர் வட இலங்கையில் தமிழ் பிரிவினைவாத கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போரில் வெற்றி பெற்ற இலங்கை ராணுவம், நாட்டில் நடந்த ஆர்ப்பாட்டங்கள், வன்முறைகள் மற்றும் அராஜகங்களுக்கு மத்தியில் அரசியலில் தலையிடவில்லை.
இம்முறையும் அரசியல் தொடர்பான ராணுவத்தின் அணுகுமுறையின் அறிகுறிகள் ஜூலை நிகழ்வுகளுக்கு முன்பே தெளிவாகத் தெரிந்தன.
"எங்கள் அதிகாரிகள் எவருக்கும் ராணுவ புரட்சி செய்யும் எண்ணம் இல்லை. இது எங்கள் நாட்டில் ஒருபோதும் நடந்ததில்லை. இங்கு அதைச்செய்வது எளிதானதும் அல்ல" என்று இலங்கையின் பாதுகாப்புச் செயலர் கமல் குணரத்னே,மே 11 ஆம் தேதி கூறினார்.
அந்த நேரத்தில் நாட்டில் நிலவிய பொருளாதார நிச்சயமற்ற சூழ்நிலையில், நாட்டின் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகவேண்டும் என்று கோரி மக்கள் வீதிகளில் இறங்கினர். ஆனால் கோட்டாபய நாட்டை விட்டோ அல்லது அதிபர் பதவியை விட்டோ வெளியேறவில்லை. எனினும் தற்போது கோட்டாபய நாட்டை விட்டு வெளியேறி ரணில் விக்கிரமசிங்க அதிபராக உள்ளார். ஆனால் பொருளாதார சவால் இன்னும் உள்ளது.
விக்கிரமசிங்க அதிபராக பதவியேற்ற பின்னர் நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரமின்மை முடிவுக்கு வருமா? இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் நாட்டை மீட்க விக்கிரமசிங்கே தவறினால் என்ன நடக்கும்?
பாகிஸ்தானிலும் வங்கதேசத்திலும் ராணுவம் அவ்வப்போது அரசியலில் குறுக்கிடுகிறது. இதே போன்ற உதாரணங்கள் ஆப்பிரிக்கா முதல் லத்தீன் அமெரிக்கா வரையிலும் காணப்படுகின்றன.
இது இலங்கையில் சாத்தியமா? இதைப் புரிந்து கொள்வதற்காக பிபிசி இந்தி, இலங்கையின் அரசியல் மற்றும் ராணுவத்தை தொடர்ந்து கவனித்துவரும் சில ஆய்வாளர்களிடம் பேசியது. அவர்கள் சொல்வது இதோ -
ராணுவத்திலும் அரசியலிலும் சிங்கள ஆதிக்கம்
இலங்கையில் கடந்த பல மாதங்களாக நிலவி வரும் அரசியல் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற நிலைக்கு மத்தியில், அங்குள்ள ராணுவம் மௌனம் காத்து வருகிறது. ஜூலை 21 ஆம் தேதி இரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத்தவிர, நாட்டில் நிலவும் அமைதியின்மை மற்றும் ஸ்திரமின்மைக்கு மத்தியில் ராணுவம் தன்னை சமநிலையுடனும் கட்டுப்பாட்டுடனும் வைத்திருந்தது.
"இலங்கை ராணுவம் இந்திய துணைக்கண்டத்தின் மற்ற பகுதிகளிலிருந்து, குறிப்பாக பாகிஸ்தான் மற்றும் வங்கதேச ராணுவத்திலிருந்து மிகவும் வேறுபட்டது. நீங்கள் அதை நாகரீகமான, ஒழுக்கமான ராணுவம் என்று சொல்லலாம்,"என்று இலங்கையின் ஜெனரல் ஜான் கொட்டேல்வாலா தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் கற்பிக்கும் சதீஷ் மோகன்தாஸ் பிபிசியிடம் தெரிவித்தார்.
கடந்த 72 ஆண்டுகளில் இலங்கை ராணுவம் தெரிவு செய்யப்பட்ட அரசை எதிர்க்க முயற்சித்ததில்லை. ராணுவம் ஜனநாயக அரசை எப்போதும் மதித்து வந்துள்ளதுடன், அவ்வப்போது அரசுகளுக்கு தனது விசுவாசத்தையும் வெளிப்படுத்தியுள்ளது.
இலங்கை ராணுவத்தில் சிங்கள பௌத்தர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். நாட்டின் அதிகாரமும் சிங்களர்களின் கையில்தான் உள்ளது. அதாவது ராணுவத்தில் இருந்து அரசு அதிகாரிகள் வரை பெரும்பான்மைவாதம் ஆதிக்கம் செலுத்துகிறது. இதனால்தான் ராணுவத்துக்கும் அரசுக்கும் இடையே மோதல் சம்பவங்கள் நடப்பதில்லை.
"ராணுவம் எப்போதுமே உள்நாட்டுப் பதற்றங்களுடன் போராடி வருகிறது. அது 1983-2009 வரை நாட்டில் நடந்த உள்நாட்டுப் போராக இருந்தாலும் சரி அல்லது வேறு உள் முட்டுக்கட்டைகளாக இருந்தாலும் சரி, இது போன்ற பிரச்சனைகளை ராணுவம் தொடர்ந்து சமாளித்து வந்தது. அதிகாரத்தில் தலையிடும் வாய்ப்பு ராணுவத்திற்கு கிடைக்கவேயில்லை," என்று சதீஷ் குறிப்பிட்டார்.
"நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து இதுவரை அரசியல் ஸ்திரமற்ற தன்மையை அது சந்தித்ததில்லை. இன்று காணப்படும் ஸ்திரமின்மை அல்லது அரசியல் அதிருப்திக்கு முக்கிய காரணம் பொருளாதார சவால்கள். ராஜபக்ஷ சகோதரர்கள் மற்றும் விக்ரமசிங்க மீது நாடு கோபமாக உள்ளது. ஏனெனில் பொருளாதார நெருக்கடி என்ற புதைகுழியில் சிக்கிய நாட்டை காப்பாற்ற தலைமையால் எதையும் செய்யமுடியவில்லை," என்று அவர் மேலும் கூறினார்.
இலங்கையின் ஜனநாயக பாரம்பரியம்
நீண்டகாலமாக இலங்கை தொடர்பான செய்திகளை எழுதும், பிபிசி நியூஸ் தெற்காசிய ஆசிரியர் அன்பரசன் எத்திராஜன், "இலங்கையில் ஒரு நல்ல ஜனநாயக பாரம்பரியம் உள்ளது,"என்று கூறுகிறார்.
"நாட்டில் உள்நாட்டுப் போர் முதல் இடதுசாரி கிளர்ச்சி வரை, எல்லா சூழ்நிலைகளிலும் நாடு வலிமையான தலைவர்களால் வழிநடத்தப்பட்டது. குறிப்பிட்ட நேரத்தில் தேர்தல்கள் நடந்தன. எனவே ராணுவ சதிப்புரட்சி என்ற கேள்விக்கே இடமில்லை. ஏனென்றால் நாடு வலுவான. ஜனநாயக பாரம்பரியத்தை கொண்டிருக்கிறது," என்று அன்பரசன் விளக்குகிறார்.
இந்தியாவின் நன்கு அறியப்பட்ட திங்க் டேங்க் இன்ஸ்டிட்யூட் ஃபார் டிஃபென்ஸ் ஸ்டடீஸ் அண்ட் அனாலிசிஸின் (ஐடிஎஸ்ஏ) மூத்த உறுப்பினரான அஷோக் பெஹுரியாவும் இதை ஒப்புக்கொள்கிறார்.
'இந்திய துணைக்கண்டத்தில் இதுவரை ராணுவப்புரட்சி நடந்த நாடுகள் என்று பார்த்தால், அவை பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம். அந்த நாடுகளின் அப்போதைய நிலைமையையும் இலங்கையின் இன்றைய நிலைமையையும் ஒப்பிடுவது சரியல்ல. இலங்கையின் அரசியல் நெருக்கடிக்கு நாட்டின் பொருளாதார வீழ்ச்சியே முக்கிய காரணம்,"என்று பெஹுரியா கூறினார்.
நெருக்கடி ஆழமானால் என்ன ஆகும்?
நிலைமை மேலும் பதற்றமாகி, நெருக்கடி முன்பை விட இன்னும் ஆழமடைந்தால், அந்த சூழ்நிலையில் ராணுவத்தின் பங்கு என்னவாக இருக்கும்?
இந்தக் கேள்விக்கு பதிலளித்த அன்பரசன் எத்திராஜன்,"இது முழுக்க முழுக்க விக்கிரமசிங்கவின் திறமையைப் பொருத்து இருக்கும். எரிபொருள் தேவையை அவர் எவ்வாறு பூர்த்தி செய்கிறார், எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களை வாங்குவதற்கு அவர் எங்கிருந்து பணம் கொண்டுவருவார் என்பதையும் பார்க்க வேண்டும். ஏனெனில் நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு. தீர்ந்து விட்டது. அடிப்படை பொருட்களை இறக்குமதி செய்ய நாடு போராடுகிறது," என்றுகூறினார்.
பிபிசி சிங்கள சேவை ஆசிரியர் இஷாரா தனசேகரா, ராணுவத்தின் பங்கு என்னவாக இருக்கும் என்பது அரசின் அறிவுறுத்தல்களைப் பொருத்தே அமையும் என்று கருதுகிறார். அரசு வழங்கும் உத்தரவுகளை ராணுவம் பின்பற்றும் என்றும் கூறுகிறார்.
"இலங்கை சுதந்திரம் அடைந்ததில் இருந்து, நாடு ஆழமான நெருக்கடியை சந்தித்த பல சந்தர்ப்பங்கள் உள்ளன. அந்த சந்தர்ப்பங்களில்கூட ஜனநாயக வழிகளில் மட்டுமே தீர்வுகள் காணப்பட்டன. வரலாற்றில் ராணுவத் தலையீடுகள் இருந்ததை பார்க்கமுடியவில்லை. எதிர்காலத்தில் அத்தகைய வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை,"என்று இஷாரா குறிப்பிட்டார்.
ராணுவம் மற்றும் அரசு
கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவிக்காலத்தின்போது , நிர்வாகத்துறை முதல் பல முக்கிய பதவிகளுக்கு ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகளை நியமித்ததாக அஷோக் பெஹுரியா கூறுகிறார்.
நாட்டின் பாதுகாப்புச் செயலராக மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, துறைமுக அதிகார சபையின் தலைவராக ஜெனரல் தயா ரத்நாயகே மற்றும் சுகாதார செயலராக மேஜர் ஜெனரல் சஞ்சீவ் முனசிங்கே ஆகியோர் நியமிக்கப்பட்டனர். முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஜெயநாத் கொலம்பஸ், முன்னாள் அதிபரின் சர்வதேச விவகாரங்களுக்கான ஆலோசகராக இருந்தார்.
2020ஆம் ஆண்டு கோவிட்-19 நோயைக் கட்டுப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட சக்திவாய்ந்த செயலணியை வழிநடத்தும் பொறுப்பு தற்போதைய ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு வழங்கப்பட்டது.
"அவர்கள் அனைவருக்கும் நிர்வாகத்தில் நீண்ட அனுபவம் இல்லை. ஆனால் அவர்கள் கடந்த சில ஆண்டுகளில் அரசு செயல்பாடுகள் பற்றி ஓரளவு புரிந்துகொண்டுள்ளனர். அதே நேரத்தில் பிராந்திய லட்சியங்களையும் முழுமையாக புறக்கணிக்க முடியாது."என்று பெஹுரியா கூறுகிறார்.
2019 ஆம் ஆண்டிற்குப் பின்னர் அதாவது கோட்டாபய ராஜபக்ஷ அதிபராகப் பொறுப்பேற்ற பின்னர், இலங்கை ஊடகங்களில் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு சொல் 'அதிகாரத்தை ராணுவமயமாக்கல்' என்பதாகும்.
கோட்டாபய தாமே ஒரு ராணுவ அதிகாரியாக இருந்ததால் இது நடந்தது. 2005 முதல் 2015 வரை அவர் நாட்டின் பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்தார். 2019 இல் அவர் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, ராணுவத்தில் பணியில் இருந்த அல்லது முன்னாள் ராணுவ மற்றும் புலனாய்வுப் பணியாளர்களான குறைந்தபட்சம் 28 பேர், முக்கிய நிர்வாகப் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டனர்.
2019 ஆம் ஆண்டிற்குப் பின்னர் அதாவது கோட்டாபய ராஜபக்ஷ அதிபராகப் பொறுப்பேற்ற பின்னர், இலங்கை ஊடகங்களில் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு சொல் 'அதிகாரத்தை ராணுவமயமாக்கல்' என்பதாகும்.
கோட்டாபய தாமே ஒரு ராணுவ அதிகாரியாக இருந்ததால் இது நடந்தது. 2005 முதல் 2015 வரை அவர் நாட்டின் பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்தார். 2019 இல் அவர் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, ராணுவத்தில் பணியில் இருந்த அல்லது முன்னாள் ராணுவ மற்றும் புலனாய்வுப் பணியாளர்களான குறைந்தபட்சம் 28 பேர், முக்கிய நிர்வாகப் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டனர்.