இலங்கையின் 9 ஆவது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக நேற்றைய தினம் நடந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் தொடங்கியுள்ளன. 22 தேர்தல் மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 77 வாக்கு எண்ணும் நிலையங்களில் இன்று காலை 7 மணி மற்றும் 8 மணி முதல் வாக்கெண்ணும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. இந்த நிலையில், தேர்தல் முடிவுகளை இன்று பிற்பகல் 2 மணிக்கு பின்னர் அறிவிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசபிரிய தெரிவிக்கின்றார்.இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலைக்கு முன்னர் முழுமையான தேர்தல் முடிவுகளை வெளியிட முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.