இலங்கை தமிழர் வரலாறு: புதிய தகவல்களைக் கூறும் 13ஆம் நூற்றாண்டு கல்வெட்டு!

திங்கள், 22 நவம்பர் 2021 (10:18 IST)
இலங்கை தமிழர் வரலாற்று பற்றி இதுவரை அறியப்படாதிருந்த புதிய வரலாற்று உண்மைகளை கூறும் கல்வெட்டு கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் தொல்லியல்துறை பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் தெரிவிக்கின்றார்.
 
திருகோணமலை மாவட்டத்தின் கோமரன்கடவல பகுதியிலுள்ள காட்டு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த கல்வெட்டு கி.பி 13ம் நூற்றாண்டிற்கு முற்பகுதியைச் சேர்ந்தது என அவர் கூறுகின்றார்.
 
கட்டுக்குளப்பற்று நிர்வாக பிரிவாக இருந்த முன்னரான காலத்தில், இந்த இடம் குமரன்கடவை என அழைக்கப்பட்டுள்ளது.
 
இந்த கல்வெட்டுடன், அதன் சமகாலத்திற்குரிய அழிவடைந்த சிவாலயமும், அழிவடைந்த அத்திவாரங்களும் காணப்படுகின்றன.
ஒரு மலையை அண்மித்து இந்த கல்வெட்டு காணப்படுவதுடன், இந்த மலையின் மேல் பகுதியில் திருவாச்சி போன்றதொரு வட்டமும், அதனுடன் இணைந்த ஆவுடையாருடன் கூடிய சிவலிங்கமும் செதுக்கப்பட்டுள்ளது.
 
சிவலிங்கத்திற்கு மேலிருக்கும் வட்டம், சக்தி வழிபாட்டு மரபுக்குரிய சக்கரமானாக இருக்கலாம் என பேராசிரியர்கள் கூறுகின்றனர்.
 
இந்த குறியீடுகளுக்கு கீழே 22 வரிகளில் தமிழ்க் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது.
 
முதல் இரு வரிகளும், ஏனையவற்றின் சில சொற்களும் சமஸ்கிருதத்தில் உள்ளதாக கூறப்படுகின்றது.
 
கல்வெட்டின் வலது பக்கத்திலுள்ள பல எழுத்துகள், மலையின் மேற்பகுதியிலிருந்து வழிந்தோடும் நீரினால் சிதைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
இதனால், கல்வெட்டின் ஒரு பக்கம் தெளிவற்று காணப்படுவதனால், கல்வெட்டின் ஊடாக வரலாற்றின் முழுமையான உள்ளடக்கத்தை புரிந்துகொள்ள முடியவில்லை என பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் தெரிவிக்கின்றார்.
 
தெற்காாசியாவின் முதன்மைக் கல்வெட்டு அறிஞரான பேராசிரியர் வை.சுப்பராயலுவுக்கும், தமிழ்நாடு தொல்லியற் துறையின் முன்னாள் மூத்த கல்வெட்டறிஞரான கலாநிதி சு.இராஜகோபாலுக்கும் இக்கல்வெட்டுப் படிகளின் புகைப்படங்கள் அனுப்பி வைக்கப்பட்டதுடன், அவர்கள் ஒரு வார கால கடும் முயற்சியின் பின்னர் அதன் வாசகங்களை கண்டுபிடித்து இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
 
அதன் வாசகம் பின்வருமாறு:
 
01)... ... க்ஷகே ஸ்ரீவிம்ஜங்கோ3ஸ நௌ ம்ருகே3 விம்ச0 திப4.
 
02).... .....ச0க்தி ப்ரதிஷ்டா2ம் கரோத் க்ருதி: ஸ்வஸ்தி ஸ்ரீ ...
 
03) ஜத்திகள்?ஸ ஜஸ்ரீகுலோஸத்துங்கசோழக் காலிங்கராயநேன் ஈழஜம
 
04) ண்டலமான மும்முடிஸ சோழமண்டல மெறிந்தும் கங்கராஜ காலிங்க வி-
 
05) ஜயவாகு தே3வற்கு வீராபி4ஷேகம் பண்ணுவித்து அநந்தரம் அஷ்ட-
 
06) ஜநேமி பூசை காலஸங்களில் ஆதி3க்ஷேத்ரமாய் ஸ்வயம்பு4வுமாந திருக்கோ-
 
07) ஜயிலைஸயுடைய நாயநாரை தெ3ண்டன் பண்ணி இன்னாய-
 
08) நாற்கு ச0ஜக்திஸ ப்ரதிஷ்டையில்லாமையில் திருக்காமக்கோட்ட நா
 
09) ச்சியாரை எழுந்தருளிவித்துத் திருப்ரதிஷ்டை பன்ணுவித்து நமக்கு ஜப்
 
10) ராப்தமாய்ஸ வருகிற காலிங்கராயப் பற்றில் மாநாமத்ஜதுஸ நாட்டில் ல-
 
11) ச்சிகாஜதிஸபுரம் இதுக்குள் நாலூர் வேச்சர்களுள்ளிட்ட நில-
 
12) மும் . . .றிதாயாளமு . . .ட்டும் இதில் மேநோக்கிய
 
13) மரமும் கீநோக்கிய கிணறும்பேருடரை நீக்கி குடிமக்களுள்பட
 
14) இந்நாஜச்சியார்க்கு திருபப்ஸபடிமாற்றுக்கும் மண்டபக் கொற்று-
 
15) க்கும்சாந்த்3ராதி3த்தவரையும் செல்லக் கடவதாக ஹஸ்தோதகம் ப-
 
16) ண்ணிக் குடுத்தேன்இ .... லுள்ளாரழிவு படாமல்
 
17) ...ண்ண..ட்ட......ப் பெறுக்கிவுண்டார்கள் ஜஆஸய்
 
18) நடத்தவும் இதுக்கு . . . . ண்டாகில் காக்கையும் நாயும்
 
19) மாக . . டையார் பி... கெங்கைக் கரையிலாயிரங்
 
20) குரால் பசுவைக் கொன்றாஜர்பாவங்ஸ கொண்டார்கள் ஆயிரம் ப்3ரா-
 
21) ஹ்மணரைக் கொன்றார் பாவஜங் கொண்ஸடார்கள் மேலொரு ...
 
22) மாற்றம் விலங்குரைப்பார் .. காலிங்கராயரின் ஜசொல்படிஸ ... ... த்தியஞ் செய்வார் செய்வித்தார்
அவை சோழர் ஆட்சியிலிருந்து ஐரோப்பியர் காலம் வரை தமிழர் பிராந்தியங்களின் ஆட்சியுரிமை, நிர்வாக ஒழுங்கு என்பன தனிப்போக்குடன் வளர்ந்தமையைக் கோடிட்டுக் காட்டுவதாக உள்ளன.
 
மேலும் யாழ்ப்பாண ராஜ்ஜியத்தின் தோற்றகாலப் பின்னணி, அது தோன்றிய காலம், தோற்றுவித்த வம்சங்கள் தொடர்பான முன்னைய வரலாற்றுப் பார்வையை மீளாய்வு செய்வதிலும், தெளிவுபடுத்துவதிலும் இக்கல்வெட்டு அதிக முக்கியத்துவம் பெறுகின்றது.
 
தமிழ்நாடு அறிஞர்கள் மற்றும் இலங்கை அறிஞர்களினால் இந்த கல்வெட்டு குறித்து பல்வேறு தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
 
இதன்படி, தென்னிந்தியாவில் நீண்டகால வரலாறு கொண்டிருந்த சோழ அரசு தஞ்சாவூரைத் தலைநகராகக் கொண்டு பத்தாம் நூற்றாண்டிலிருந்து ஒரு பேரரசாக எழுச்சியடைந்த போது அவ்வரசின் செல்வாக்கால் சமகால இலங்கை வரலாற்றிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டன.
 
இதனால் தமிழ் நாட்டு அரச வம்சங்களை வெற்றி கொண்டதன் பின்னர் சோழர்கள் இலங்கைக்கு எதிராகவும் படையெடுத்து வந்தனர்.
 
இது முதலாம் பராந்தகசோழன் காலத்தில் ஆரம்பித்துப் பின்னர் ராஜராஜசோழன் காலத்தில் கி.பி. 993 இல் இலங்கைளின் வடபகுதி வெற்றி கொள்ளப்பட்டது.
 
கி.பி. 1012 இல் முதலாம் ராஜேந்திர சோழன் காலத்தில் இலங்கை முழுவதும் வெற்றி கொள்ளப்பட்டு புதிய தலைநகரம் ஜனநாதபுரம் என்ற பெயருடன் பொலன்னறுவைக்கு மாற்றப்பட்டதாக சோழர்காலச் சான்றுகளால் அறிகின்றோம்.
 
சோழரின் 77 ஆண்டுகால நேரடி ஆட்சியில் அவர்களது நிர்வாக முறையே பின்பற்றப்பட்டது.
 
இதன்படி இலங்கை மும்முடிச் சோழ மண்டலம் என்ற பெயரைப் பெற்றதுடன் வளநாடு, நாடு, ஊர் போன்ற நிர்வாக அலகுகளும் இங்கு பின்பற்றப்பட்டன.திருகோணமலையில் மட்டுமே ஐந்து வளநாடுகள் இருந்துள்ளன.
 
அத்துடன் சோழரின் அரசியல், ராணுவ, நிர்வாக நடவடிக்கைகளின் முக்கிய மையமாக திருகோணமலை இருந்ததை அவர்களின் ஆட்சிக்கால ஆதாரங்களும் உறுதிப்படுத்துகின்றன.
 
பொலன்னறுவையைத் தலைநகராகக் கொண்ட சோழரின் ஆட்சி கி.பி.1070 இல் வீழ்ச்சியடைந்தாலும் சோழரின் ஆதிக்கம், நிர்வாக முறை, பண்பாடு என்பன தமிழர் பிராந்தியங்களில் தொடர்ந்திருக்கலாம் எனக் கருதமுடிகின்றது.
 
இதை உறுதிப்படுத்தும் புதிய சான்றாகவே கோமரன்கடவலக் கல்வெட்டுக் காணப்படுவதாக பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் தெரிவிக்கின்றார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்