கொரோனாவின் 3ம் கட்ட அலையை எதிர்நோக்கி மலேசியா: 'சுனாமி போல் தாக்கும்'

வெள்ளி, 27 மார்ச் 2020 (22:08 IST)
<img style="border: 1px solid #DDD; margin-right: 0px; float: none; z-index: 0;" class="imgCont" src="https://media.webdunia.com/_media/ta/img/article/2020-03/27/full/1585327385-2841.jpg" align="center" title="Malaysia is facing a wave of Corona phase 3: " tsunami="" hits="" like="" '"="" width="740" height="417" alt="malaysia">
கொரோனாவின் 3ம் கட்ட அலையை எதிர்நோக்கி மலேசியா: 'சுனாமி போல் தாக்கும்'


கொரோனாவின் 3ம் கட்ட அலையை எதிர்நோக்கி மலேசியா: 'சுனாமி போல் தாக்கும்'
மலேசியாவில் கொரோனா வைரஸின் மூன்றாம் கட்ட அலை எந்த நேரத்திலும் எழும் எனவும், இம்முறை அது சுனாமி போன்ற தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்ப்பதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த மூன்றாம் கட்ட சுனாமி போன்ற அலையை எதிர்கொள்ளும் நடவடிக்கையாகவே மலேசியாவில் பொது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டதாக அந்த அமைச்சின் பொது ஆணையர் டாக்டர் நூர் இஷான் அப்துல்லா குறிப்பிட்டுள்ளார்.

"அடுத்து என்ன நடக்கும் என்பதை முன்கூட்டியே யூகித்துதான் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டது. இப்போது சுனாமி என்று குறிப்பிடக்கூடிய கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாம் கட்ட அலையானது தீவிரமாக இருக்கும் என்று 3 வாரங்களுக்கு முன்பே யூகித்தோம். மார்ச் மாத துவக்கம் வரை விடுமுறை காலத்தில் ஏராளமான மலேசியர்கள் பல்வேறு நாடுகளுக்குச் சென்று திரும்பியுள்ளனர். எனவேதான் கொரோனா வைரஸின் மூன்றாவது அலை அதிக எண்ணிக்கையிலான நோயாளிகளை அடையாளம் காட்டும் என எதிர்பார்க்கிறோம்," என்று இன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்தார்.

இந்தாண்டு விடுமுறைக் காலத்தில் மலேசியர்கள் பலர் ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று வந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இரான், இத்தாலி உள்ளிட்ட நாடுகளைப் போல் இவையும் கொரோனா வைரஸ் பாதிப்புள்ள நாடுகள் என்பது தெரிந்தும் பலர் சென்று வந்ததாக கூறினார்.

மலேசியாவின் குறிப்பிட்ட ஓர் அமைச்சு 8 ஆயிரம் ஊழியர்கள் விடுமுறையின்போது வெளிநாடு சென்றுவர அனுமதி அளித்துள்ளது என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
பலி எண்ணிக்கை 26; இதுவரை 2,161 பேருக்குப் பாதிப்பு.

இத்தகைய சூழ்நிலையில் மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 26ஆக அதிகரித்துள்ளது. இன்று இத்தகவலை வெளியிட்ட சுகாதார அமைச்சு, இதுவரை உயிரிழந்த அனைவருமே வயதானவர்கள் என்றும், நீண்ட காலம் நோய்வாய்ப்பட்டிருந்தவர்கள் என்றும் தெளிவுபடுத்தி உள்ளது.
 இன்று ஒரே நாளில் புதிதாக 130 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் மலேசியாவில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,161 ஆக உயர்ந்துள்ளது.

25ஆவது நபராக உயிரிழந்தவர் உள்நாட்டைச் சேர்ந்த 83 வயது ஆடவர் ஆவார். 26ஆவது நபராக பலியானவர் 53 வயதான ஆடவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் 35 வயதான இளைஞர் ஒருவரும் கோவிட் 19 நோயால் மரணமடைந்துள்ளார் என்ற தகவல் மலேசியர்களை வருத்தத்தில் மூழ்கடித்துள்ளது.

குறிப்பிட்ட நபர் மார்ச் மாதத் தொடக்கத்தில் இந்தோனீசியா சென்று திரும்பியுள்ளார். இதையடுத்து இம்மாதம் 18ஆம் தேதி கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், நேற்றிரவு மரணமடைந்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதையடுத்து கடினமான நிலையை எதிர்கொள்ளத் தயாராகி வருவதாகவும் அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையே பொதுநடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை ஏப்ரல் 28ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என மலேசிய பொருளாதார ஆராய்ச்சி நிறுவனம் அரசுக்கு அறிவுறுத்தி உள்ளது.

கையிருப்பில்தேவையான அரிசி

மலேசியாவில் அடுத்த இரண்டரை மாதங்களுக்குத் தேவையான அரிசி கையிருப்பில் உள்ளதாக விவசாயம் மற்றும் உணவுத் துறை அமைச்சு தெரிவித்துள்ளது. வியட்நாம் உள்ளிட்ட சில நாடுகளில் இருந்து மலேசியா அரிசி இறக்குமதி செய்கிறது.

இந்நிலையில் கிருமித் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக அனைத்து விதமான ஏற்றுமதிக்கும் வியட்நாம் அரசு தடைவிதித்துள்ளது. இதனால் மலேசியாவில் தட்டுப்பாடு இன்றி அரிசி கிடைக்க்குமா எனும் கேள்வி எழுந்தது. எனினும் தேவையான அரிசி கையிருப்பில் உள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது 5 லட்சம் டன் அரிசி கையிருப்பில் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள மலேசிய அரசு, நாட்டின் ஒரு மாதத்துக்கான ஒட்டுமொத்த அரிசி தேவை 2 லட்சம் டன்கள்தான் எனச் சுட்டிக்காடி உள்ளது.

"பொதுமக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்படும் முன்பே அரிசி கையிருப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும், தேவவையான பொருட்கள் கையிருப்பில் இருப்பதை உறுதி செய்த பிறகே நாட்டின் எல்லைகள் மூடப்பட்டதாகவும் அந்த அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

"மே மாத இறுதி வரை தேவைப்படும் அரிசி கையிருப்பில் உள்ளது. இப்படி ஒரு சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்பதைக் கணக்கிட்டுதான் சற்றே அதிக விலை என்றாலும்கூட வியட்நாமிலிருந்து முன்பே தேவையான அரிசி கொள்முதல் செய்யப்பட்டது," என உணவுத்துறை கூறியுள்ளது.

உலகளவில் அரிசியை அதிகம் கொள்முதல் செய்யும் நாடுகளில் மலேசியா 22ஆம் இடத்தில் உள்ளது. உள்நாட்டிலேயே அரிசி விளைந்தாலும் தனது தேவையில் 40 விழுக்காடு அளவிலான அரிசியை பிற நாடுகளிடம் இருந்து இறக்குமதி செய்கிறது.

'கண்ணுக்குப் புலப்படாத சக்திகளுடன் மலேசியா போரிடுகிறது'

நாட்டின் பிரதமர் என்ற வகையில் தாமும் மலேசிய அரசும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து நாட்டைக் காப்பாற்ற தங்களால் இயன்ற அனைத்தையும் செய்து வருவதாக மலேசியப் பிரதமர் மொகிதின் யாசின் தெரிவித்துள்ளார்.
யாசின்

கண்ணுக்குப் புலப்படாத சக்திகளுடன் மலேசியா அரசு போரிட்டு வருவதாக குறிப்பிட்டுள்ள அவர், உலக வரலாற்றில் முன்னெப்போதும் நிகழ்ந்திராத ஒரு நிகழ்வு இது எனத் தெரிவித்துள்ளார்.

"தற்போது நாட்டில் அமைந்திருப்பது புதிய அரசாங்கம். இது மக்களால் வாக்களித்துத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கமாக இல்லாமல் போகலாம். எனினும் மக்கள் மீது இந்த அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது என்பதை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டுமென விரும்புகிறேன்.

"சிறப்பான ஒரு தருணத்தில் நான் இந்த நாட்டின் பிரதமராக பொறுப்பேற்கவில்லை என்பதை ஒப்புக் கொள்கிறேன். அரசியல், உடல்நலம், பொருளாதாரம் என ஒரே சமயத்தில் பல நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளேன்.

"எனவே மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள், சீக்கியர்கள் பழங்குடியின மக்கள் என யாராக இருப்பினும், தயவு கூர்ந்து என்னையும் எனது அமைச்சரவை சகாக்களையும் அரசாங்கத்தையும் தற்போது மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்காக பொருத்தருளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

"தற்போது நாங்கள் மிகக் கச்சிதமாக செயல்படுவதாகக் கூறுவதற்கில்லை. ஆனால், நடப்பு நெருக்கடியிலிருந்து நாட்டை வெளியே கொண்டு வருவதற்கு எங்களால் இயன்ற அனைத்தையும் செய்து வருகிறோம். கடவுளின் விருப்பத்தின்படி இந்த நெருக்கடி முடிவுக்கு வரும்போது நாம் முன்பைவிட அதிக சக்தியுடன் உருப்பெறுவோம் என நம்புகிறேன்," எனப் பிரதமர் மொகிதின் யாசின் மேலும் தெரிவித்துள்ளார்.

 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்