சாலை வசதி இல்லாததால் பறிபோன குழந்தையின் உயிர் : தமிழ்நாட்டு மலைகிராமங்களில் ஏன் இந்த நிலை?
செவ்வாய், 30 மே 2023 (11:13 IST)
சாலை வசதி இல்லாததால் பறிபோன குழந்தையின் உயிர் : தமிழ்நாட்டு மலைகிராமங்களில் ஏன் இந்த நிலை?
அந்த பெற்றோர் இறந்துபோன தங்கள் குழந்தையின் உடலை கைகளில் சுமந்துகொண்டு , மலையேறி தங்களது கிராமத்திற்கு நடந்து செல்லும் காட்சி சமூக ஊடகங்களில் கடந்த ஞாயிறன்று அதிகமாக பகிரப்பட்டு வந்தது.
அவர்களின் ஊருக்கு சாலை வசதி இல்லாததால், அந்த குழந்தையின் உடலை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் அவர்களை பாதி வழியிலேயே இறக்கிவிட்டுச் சென்றது, குழந்தையை இழந்து தவித்திருந்த அவர்களை மேலும் உடைந்துபோக செய்தது. கிட்டதட்ட இரண்டு மணி நேரத்தில், பத்து கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று தங்களின் கிராமத்தை அடைந்த அவர்கள், தங்கள் குழந்தையின் இறுதிசடங்கை செய்து முடித்தனர்.
அந்த குழந்தையின் பெயர் தனுஷ்கா. வயது 18 மாதங்கள்! ஊர் - வேலூர் மாவட்டம், அணைக்கட்டு பகுதியை அடுத்த அல்லேரி மலைப்பகுதிக்கு உட்பட்ட அத்திமரத்துக்கொல்லை கிராமம், தமிழ்நாடு.
வேலூர் அல்லேரி மலைப்பகுதி மட்டுமல்ல, தமிழகத்தின் பல்வேறு மலைகிராம பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்கள் இன்றளவும் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல்தான் வாழ்ந்து வருகிறார்கள் என்று கூறுகிறார்கள் பழங்குடியின மக்களின் நலனுக்காக செயல்பட்டு வரும் செயற்பாட்டாளர்கள்.
இப்படியொரு சம்பவம் தமிழ்நாட்டில் நடைபெற்றிருப்பது, பல விவாதங்களை எழுப்பியுள்ளது. குறிப்பாக ஆளும்கட்சியான திமுகவின் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
உண்மையில் தனுஷ்காவின் மரணம் எதனால் ஏற்பட்டது? தமிழகத்தில் உள்ள மலைப்பகுதி கிராமங்களின் நிலை என்ன? அங்கு வாழும் பழங்குடியின மக்களின் உரிமை தொடர்ச்சியாக மறுக்கப்படுகிறதா?
தனுஷ்கா எப்படி இறந்தார்?
அல்லேரி மலைப்பகுதிக்கு உட்பட்ட அத்திமரத்துக்கொல்லையைச் சேர்ந்த விஜி மற்றும் பிரியா ஆகிய பழங்குடியின தம்பதியினரின் ஒன்றரை வயது மகள்தான் தனுஷ்கா. கடந்த 26ஆம் தேதி, குழந்தையுடன் தங்களது வீட்டு வாசலில் அந்த தம்பதியினர் தூங்கியுள்ளனர். அப்போது, காட்டுப்பகுதியில் இருந்து வந்த விஷபாம்பு ஒன்று குழந்தையை கடித்துள்ளது. திடுக்கிட்டு அழ துவங்கிய குழந்தையை பெற்றோர்கள் கவனித்தபோது, அருகே பாம்பு ஒன்று இருப்பதை கண்டு அதிர்ந்துள்ளனர்.
உடனடியாக குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். ஆனால் அல்லேரியிலிருந்து வலதிரம்பட்டு என்ற இடத்திற்கு வந்து சேர்ந்தால்தான் இந்த மலைப்பகுதி மக்களுக்கு தார் சாலை வசதியும், பேருந்து வசதியும் கிடைக்கும். அல்லேரியிலிருந்து வலதிரம்பட்டிற்கு 6 கிமீ தூரம் இருக்கிறது. நண்பர்களிடம் இருசக்கர வாகனம் ஒன்றை பெற்றுகொண்டு அவர்கள் கிளம்பியுள்ளனர். ஆனால் வாகனம் பாதி வழியிலேயே நின்றுவிட, அந்த இரவு நேரத்தில் குழந்தையை தூக்கிகொண்டு வலதிரம்பட்டிற்கு அவர்கள் நடந்தே வந்து சேர்ந்தனர்.
அதன்பின், அணைகட்டு அரசு மருத்துவமனையில் இரவு 10 மணிக்கு தனுஷ்கா அனுமதிக்கப்படுகிறாள்.ஆனால் அங்கு போதிய வசதி இல்லாததால் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு தனுஷ்காவை அனுப்பியுள்ளனர். அடுக்கம்பாறை மருத்துவமனையை சென்றடைந்தபோது இரவு மணி 2. அங்கே தனுஷ்கா இறந்துபோனதாக அறிவிக்கப்பட்டாள்.
மறுநாள் சனிக்கிழமை காலை பிரேத பரிசோனைக்கு பிறகு தனுஷ்காவின் உடல் ஆம்புலன்ஸில் அனுப்பி வைக்கப்பட்டது. தார் சாலை வசதி இருக்கும் தூரம் வரை மட்டுமே வந்த ஆம்புலன்ஸ், மேலும் வாகனம் செல்ல வழியில்லாததால் அவர்களை பாதியிலேயே இறக்கிவிட்டிருக்கிறது. அதன் பின் நடந்த காட்சிகள்தான் கட்டுரையின் தொடக்கத்தில் விவரிக்கபட்டிருந்தன.
பாம்பு கடித்ததால் தனுஷ்காவின் உடல்நிலை மோசமானலும், சரியான சாலை வசதியும் போக்குவரத்து வசதியும் இருந்திருந்தால் தங்களது குழந்தையை காப்பாற்றி இருக்கலாம் என்பதே அந்த பழங்குடியின மக்களின் ஒட்டுமொத்த ஆதங்கமாய் இருக்கிறது. தனுஷ்காவின் மரணத்திற்கு பாம்பு கடித்தது மட்டுமே காரணமல்ல என்பதை அவர்கள் உறுதியாக நம்புகின்றனர்.
சாலை வசதிக்காக நீடிக்கும் 20 ஆண்டுகால போராட்டம்
“ஓராண்டு, இரண்டு ஆண்டு, மூன்றாண்டு அல்ல கிட்டதட்ட 20 ஆண்டுகளாய் அதிகாரிகளிடமும், அரசியல்வாதிகளிடமும் கோரிக்கை அளித்து அளித்து ஓய்ந்து போய்விட்டோம். இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் அவர்கள் எடுக்கவில்லை. எங்களை அலட்சியமாக கையாள்வது அவர்களுக்கு வழக்கமான ஒன்றுதான்” என்று பிபிசியிடம் தெரிவிக்கிறார் அத்திமரத்துக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த பழங்குடி ஒருவர்.
தன்னுடைய அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாத அவர் பிபிசியிடம் தொடர்ந்து பேசுகையில், “இத்தனை ஆண்டுகளாய் நாங்கள் சாலை வசதிக்காக மனு கொடுத்து அலைந்தபோதெல்லாம், இதோ பத்து மாதத்தில் வேலை தொடங்கிவிடும், 6 மாதத்தில் அனைத்தும் செய்து முடிக்கப்படும், இதோ வேலையை ஆரம்பித்துவிடலாம் என்று பல பொய்களை சொல்லி சொல்லி எங்களை நம்பவைத்து வேடிக்கை பார்த்திருக்கிறார்கள். ஆனால் ஒருமுறை கூட அவர்கள் கூறியபடி எந்தவொரு நடவடிக்கையும் எடுத்ததில்லை.
ஆனால் இப்போது எங்கள் கிராமத்தைச் சேர்ந்த குழந்தை ஒன்று இறந்த பிறகு, இந்த விவகாரம் வெளியே தெரிந்த பிறகு சாலை வசதிகள் விரைவில் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வருகிறது. அதையும் எந்தளவிற்கு நம்புவது என்று தெரியவில்லை.
எது என்ன ஆனாலும், எங்கள் குழந்தையின் உயிரை இவர்களால் திரும்ப கொடுக்க முடியுமா? இவர்கள் எத்தனை கோடி இழப்பீடு வழங்கினாலும் ஒரு குழந்தையின் உயிரை இவர்களால் ஈடு செய்ய முடியுமா?” என்று ஆதங்கத்துடன் கேள்வியெழுப்புகிறார் அவர்.
”இவர்கள் தார் சாலை வசதி செய்து தர மறுக்கிறார்கள், எனவே எங்கள் கிராமத்திற்கு வரும் மண் பாதையையாவது சமன் செய்து சீர் செய்யலாம் என்று நினைத்து, ஒருமுறை எங்களுடைய சொந்த செலவில் ஜேசிபி இயந்திரத்தை கொண்டு வேலையை துவங்கினோம், ஆனால் இது வனத்துறை சட்டங்களுக்கு புறம்பானது என்று கூறி எங்களிடமே 3லட்சம் ரூபாய் அபராதம் வசூலித்தனர் வனத்துறை அதிகாரிகள்” என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
“மலைப்பகுதிகளில் சாலை வசதி கோரி முறையிடும்போது, வனத்துறை அதிகாரிகள் அனுமதி தர மறுப்பதும் இதுபோன்ற விவகாரங்களில் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை தருவதற்கு சமூகம் தயாராக இல்லை
“இப்போது அத்திமரத்துக்கொல்லையில் நடந்திருக்கும் இந்த மரணம் குறித்து நீங்கள் கேள்வியெழுப்பினால், இதுவொரு விபத்து போன்றுதானே நடந்திருக்கிறது, மலைப்பகுதிகளில் இருந்து கீழே வந்ததால் மருத்துவ வசதிகள் கிடைப்பதற்கு தாமதம் ஏற்பட்டிருக்கலாம் என்பது போன்ற காரணங்கள் அரசு தரப்பில் முன்வைக்கபடலாம். ஆனால் இங்கு சமவெளி பகுதிகளில் வசிக்கும் பழங்குடிகளுக்கு கூட இன்றளவும் எந்த வசதிகளும் கிடைப்பதில்லை என்பதே உண்மை” என்கிறார் மானுடவியலாளர் பகத்சிங்.
பிபிசியிடம் பேசிய அவர், “ இங்கு வாக்கு வங்கியை மையமாக கொண்டே அனைத்து அரசியல் நகர்வுகளும் இருக்கின்றன. எனவே சிறியளவில் காணப்படும் பழங்குடிகளின் நலனை பெரிதாக யாரும் கருதுவதில்லை.
அதேபோல், இந்தியாவில் காணப்படும் இந்த பிரத்யேக சாதிய கட்டமைப்பு, பழங்குடி மக்களை இந்த சமூகத்தில் இருந்து எப்போதும் மிக தூரமாக வைத்தே பார்க்கிறது” என்று குறிப்பிடுகிறார்.
"ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் பழங்குடிகளின் நிலை ஒன்றுதான்"
”பழங்குடிகளை வனத்தில் இருந்து நீக்க வேண்டுமென்பதே அதிகாரிகளின் நோக்கமாக இருக்கிறது. நிலைமை இப்படி இருக்கும்போது எங்களுக்கு எப்படி அவர்கள் அடிப்படை வசதிகளை செய்து தருவார்கள்” என்கிறார் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் பெ.சண்முகம்.
பிபிசியிடம் பேசிய அவர், ”பொதுவாகவே ஆதிவாசி மக்கள் வசிக்கும் பகுதிகளை புறக்கணிக்கும் மனோபாவம்தான் அரசியல்வாதிகளிடமும், ஆளும்கட்சிகளிடமும் காணப்படும். இதையும் மீறி எங்கள் மலைகிராம பகுதிகளில் சாலை வசதி அமைப்பதற்கு அரசே நடவடிக்கை எடுத்தால் கூட, வனம் அழிந்துவிடும் என்ற காரணத்தைச் சொல்லி வனத்துறை அதிகாரிகள் தடுத்துவிடுகின்றனர்.
வனத்தில் இருக்கும் மரம், செடி, கொடிகளை போன்றும், அங்கு வாழும் விலங்குகளை போன்றும் பழங்குடி மக்களும் இயற்கையின் ஒரு அங்கமாக விளங்குபவர்கள் என்ற உண்மையை முதலில் இத்தகைய அதிகாரிகளும், அரசும் உணர வேண்டும். வனத்திலிருந்து பழங்குடிகளை நீக்க வேண்டுமென்பது, கடலில் இருக்கும் மீன்களை தூக்கி வெளியே போடுவதற்கு சமம்” என்று தெரிவித்தார்.
”வேலூரின் இந்த அல்லேரி மலைப்பகுதி மட்டுமல்ல, தமிழகத்தில் இதுபோன்று எத்தனையோ மலைப்பகுதிகள் இருக்கின்றன. திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் திருமூர்த்தி மலைப்பகுதிக்கு இன்று வரை சாலை வசதி கிடையாது. அங்கிருப்பவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டால், பெண்களுக்கு பிரசவ வலி ஏற்பட்டால் தொட்டில் கட்டிதான் தூக்கி சுமக்கிறார்கள். அங்கே பல போராட்டங்கள் நடத்தியும், டெல்லி வரை சென்று முறையிட்டும் வனத்துறை அனுமதி தரவில்லை.
அதேபோல் ஜவ்வாது மலையில் ஜமுனாமரத்தூர் வரைதான் சாலை வசதி உள்ளது. பச்சமலையில் குறிப்பிட்ட பகுதி வரைதான் சாலை இருக்கிறது. கல்வராயன் மலையில் வெள்ளிமலை வரைதான் பேருந்து செல்லும், அந்த வெள்ளிமலைக்கு பின்னால் 80 கிராமங்கள் உள்ளன, அவர்கள் நடந்துதான் செல்ல வேண்டும். இப்படி சொல்லிகொண்டே போகலாம்.
இந்த அத்தனை பகுதிகளிலும் வசிக்கும் மக்களின் நிலை என்னவாக இருக்கும் உங்களால் யோசிக்க முடிகிறதா?” என்று கேள்வியெழுப்புகிறார் சண்முகம்.
அவர் தொடர்ந்து பேசுகையில், “வனவுரிமைச் சட்டம்(2006),மலைகிராம மக்களின் அடிப்படை வசதிகளுக்காக நிலங்களை ஒதுக்கலாம் என்று கூறுகிறது. ஆனால் அதனை எந்த அரசாங்கமும் நடைமுறைபடுத்துவதில்லை.
அதாவது கிராமசபை தீர்மானம் நிறைவேற்றினால், மக்களின் குடிநீர் வசதி, சாலை வசதி, பள்ளிக்கூடம், மருத்துவமனை போன்ற அடிப்படை வசதிகளுக்காக வனத்துறைக்கு சொந்தமான இடங்களை ஒதுக்கமுடியும் என்று சட்டம் கூறினாலும், வனம் அழிந்துவிடும் என்ற காரணத்தை கூறியே பெரும்பாலான நேரம் எங்களுடைய உரிமை மறுக்கப்படுகிறது.
ஆனால் அதேசமயம் கொடைக்கானல், ஊட்டி, ஏர்காடு இத்தகைய வருமானம் வரும் இடங்களுக்கு மட்டும் எவ்வளவு கடினமாக இருந்தாலும், எவ்வளவு செலவானாலும் இவர்களால் எப்படி சாலைகளை அமைக்க முடிகிறது என்ற கேள்வியும் எங்களிடம் இல்லாமல் இல்லை. மலைகள் என்றால் எல்லாம் மலைகள்தானே, காடுகள் என்றால் அனைத்தும் காடுகள்தானே.
எங்கள் உரிமையை கேட்கும் போதும் மட்டும் இவர்கள் சட்டம் பேசுகிறார்கள். சிலர் எங்களின் நிலையை பார்த்து பரிதாபம் மட்டுமே கொள்கிறார்கள். ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் பழங்குடிகளின் நிலை என்றும் ஒன்றுதான். அது மாறபோவதில்லை” என்கிறார் சண்முகம்
திமுக எடுத்த நடவடிக்கைகள் என்ன?
தனுஷ்காவின் மரணத்திற்கு பிறகு தற்போது அங்கு சாலை வசதியும், துணை ஆரம்ப சுகாதார நிலையமும் அமைக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன். ஆனால் இத்தகைய நடவடிக்கை இதற்கு முன்னதாக ஏன் எடுக்கப்படவில்லை? இருபது ஆண்டுகளாக சாலை வசதி கேட்டு வந்த மக்களுக்கு ஏன் உரிமை மறுக்கப்பட்டு வந்தது? என்ற கேள்விகளோடு வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியனை தொடர்புகொண்டது பிபிசி தமிழ்.
அப்போது பேசிய அவர், “ இத்தனை ஆண்டுகளாய் அவர்களுக்கு ஏன் சாலை வசதிகள் அமைத்து தருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பது குறித்து எனக்கு தெரியாது.
நான் 2021லிருந்து இங்கு ஆட்சியராக பொறுபேற்றிருக்கிறேன். அப்போதிலிருந்து அந்த பகுதிகளில் சாலை வசதிகளை அமைப்பதற்கு, முறைப்படி ஒவ்வொரு நடவடிக்கையையும் படிப்படியாக எடுத்து வருகிறேன்.
அது முழுக்க முழுக்க வனத்துறையினரின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. எனவே அதற்கு நிறைய நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும்.
முழுமையாக சர்வே செய்து, எங்கெங்கு கல்வெட்டு வரவேண்டும் என்பது போன்ற ஆய்வுகளை எப்போதோ மேற்கொண்டுவிட்டோம். இதை அந்த பகுதி மக்கள் நம்புவார்களா என்று எனக்கு தெரியாது. அல்லது முந்தைய அதிகாரிகள் போன்றுதான் இவரும் பேசுகிறார் என்றுகூட நினைக்கலாம்.
ஆனால் நாங்கள் நியாயமான முறையில் அவர்களுக்கு தேவையானவற்றை செய்து வருகிறோம் என்பது மட்டும் உண்மை. இதுகுறித்த விரிவான அறிக்கையை பத்திரிக்கையாளர்களுக்கு ஏற்கனவே வழங்கியிருக்கிறோம்” என்று தெரிவித்தார்.
பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கபட்டிருந்த அறிக்கையில், “2021ஆம் ஆண்டு முதலமைச்சர் ஸ்டாலின் வேலூர் பகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்காக சுற்றுபயணம் மேற்கொண்டபோது, மலைப்பகுதிகளில் சாலை வசதிகள் ஏற்படுத்துவதில் அதிக கவனம் செலுத்த வேண்டுமென உத்தரவிட்டிருந்தார். மலை கிராமங்களுக்கு சாலை வசதி ஏற்படுத்துவதற்கு, துல்லியமான அளவீட்டுப் பணிகள் மேற்கொண்ட பின்னரே வனத்துறையிடம் ஒப்புதல் பெற முடியும். அதன் அடிப்படையில் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.