நரேந்திர மோதி உரைக்கு ஆயிரக் கணக்கில் டிஸ்லைக்; சுதாரித்துக் கொண்ட பாஜக
புதன், 21 அக்டோபர் 2020 (08:45 IST)
இந்தியாவின் முக்கிய நாளிதழ்கள் மற்றும் செய்தி இணையதளங்களில் வெளியான செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
நரேந்திர மோதி உரைக்கு டிஸ்லைக்
இந்தியாவில் இது திருவிழா காலம் என்பதால், இந்தக் காலகட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் மேலும் தீவிரமாகக் கூடும் என்று நரேந்திர மோதி எச்சரித்த காணொளி சமூக ஊடகங்களில் பேசுபொருள் ஆகியுள்ளதாக இந்தியா.காம் செய்தி இணையதளம் தெரிவிக்கிறது.
இந்திய பிரதமர் நரேந்திர மோதி செவ்வாய்க்கிழமை மாலை இந்திய மக்களுக்கு உரையாற்றியது பாரதிய ஜனதா கட்சியின் அலுவல்பூர்வ யூடியூப் பக்கத்தில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
நரேந்திர மோதி பேசத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே 4,500க்கும் அதிகமான முறை அந்த காணொளியில் டிஸ்லைக் செய்திருந்தனர்.
இதன் காரணமாக அந்தக் காணொளியில் லைக் மற்றும் டிஸ்லைக் பட்டன்கள் அணைத்து வைக்கப்பட்டிருந்தன.
கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் ஜேஈஈ, நீட் உள்ளிட்ட தேர்வுக லை நடத்துவதற்கு எதிராக இதற்கு முன்பும் நரேந்திர மோதியின் உரைகள் பாஜகவின் யூடியூப் பக்கத்தில் லட்சக் கணக்கில் டிஸ்லைக் செய்யப்பட்டிருக்கின்றன.
ஒருவேளை இதை எதிர்பார்த்து கமென்ட் செய்வதற்கான வாய்ப்பும் இந்த காணொளியில் நீக்கப்பட்டிருந்தது நிகழ்ந்திருக்கலாம் என்று இந்தியா.காம் செய்தி இணையதளம் தெரிவிக்கிறது
பயிர்தான் விவசாயிகளின் உயிர் - மு.க. ஸ்டாலின்
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் பயிர் வீணாவதாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு குறித்து தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
விளைந்தும் விலையில்லை எனும் அவலநிலையாக, டெல்டா மாவட்டங்களில் அரசு கொள்முதல் நிலையங்களில் குவிந்து கிடக்கும் நெல் மூட்டைகள் நனைந்து, முளைத்து வீணாகின்றன.
உரியமுறையில் கொள்முதல் நடைபெறாமல் ஆள்வோரின் ஊழல் பெருச்சாளிகள் செய்யும் அட்டகாசங்கள் ஓயவில்லை.
இதனால் விவசாயிகள் கடும் பாதிப்படைந்து உள்ளனர். எடப்பாடி பழனிசாமி அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன். பயிர்தான் விவசாயிகளின் உயிர் என்று பதிவிட்டுள்ளார் என்கிறது அந்த செய்தி.
வேளாண் சட்டங்களுக்கு எதிரான பஞ்சாப் மசோதாக்கள் ஒப்புதல்
மத்திய அரசு இயற்றிய வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மசோதாக்களுக்கு பஞ்சாப் சட்டப் பேரவை ஒருமனதாக ஒப்புதல் அளித்தது என்கிறது தினமணி செய்தி.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்ற சிரோமணி அகாலி தளம், வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து அக்கூட்டணியில் இருந்து விலகியது. அச்சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இத்தகைய சூழலில், பஞ்சாப் சட்டப் பேரவையின் சிறப்பு கூட்டத்தொடா் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சுமாா் 5 மணி நேர விவாதத்துக்குப் பிறகு, மத்திய அரசு இயற்றிய வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், அச்சட்டங்களை நீா்த்துப்போகச் செய்யும் வகையிலான மசோதாக்களுக்கும் பேரவை உறுப்பினா்கள் ஒருமனதாக ஒப்புதல் அளித்தனா்.
மின்சார சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. அதற்கு எதிராகவும் பஞ்சாப் பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதற்கும் எம்எல்ஏ-க்கள் ஒருமனதாக ஒப்புதல் அளித்தனா்.