பத்மாசனம், சுகாசனம், வஜ்ராசனம் போன்ற எந்த ஆசன நிலையிலும் உட்காரலாம். நாற்காலியில் உட்காரலாம் அல்லது சாதாரணமாக நின்று கொண்டு இடுப்பில் கைகளை வைத்துக் கொள்ளவும்.
முறை:
புஜங்களையும் தலையையும் நேராக நிமிர்த்தி வைத்திருக்கவும். தொய்வு ஏற்படக்கூடாது. கழுத்தை மட்டும் திருப்பி முகத்தை வலது புறமாக திருப்பவும். பார்வையையும் வலது கோடிக்கு செலுத்தவும். இதே நிலையில் 3 முதல் 5 மூச்சுக்காற்று நேரம் வைத்திருக்கவும். பிறகு ஆரம்ப நிலைக்கு மெதுவே திரும்பவும்.
இதே போல் கழுத்துடன் முகத்தை அப்படியே இடது புறமாக நன்றாக திருப்பவும். பார்வை இடது கோடிக்கு செலுத்தவும்.
அதே போல் 3 முதல் 5 மூச்சுக்காற்று நேரம் அந்த நிலையில் நீடிக்கவும். மீண்டும் ஆரம்ப நிலைக்கு திரும்பவும். இப்போது கழுத்துத் தசைகளை ரிலாக்ஸ் செய்யவும், தலையை பின்பக்கமாக சாய்க்கவும். தலையை நன்றாக கீழே சாய்க்கவும். பார்வையை உங்கள் புருவங்களில் நிறுத்தவும். இந்த நிலையில் சிறிது நேரம் அப்படியே இருக்கவும். பிறகு மெதுவே ஆரம்ப நிலைக்கு வரவும்.
இந்த ஆசனத்தை வேறு வழியிலும் செய்யலாம். முதலில் தலையை நன்றாக பின் பக்கமாக சாய்த்து, முகத்தை வலது புறமும் இடது புறமும் திருப்பியும் செய்யலாம். இந்த 4 இயக்கங்களும் சேர்ந்து பிரம்ம முத்திரையை உருவாக்குகிறது.
WD
மூச்சு: தலையை நன்றாக பின் பக்கமாக தாழ்வாக சாய்க்கும்போதும், முகம் மார்பை நோக்கி கீழாக சாய்க்கப்படும்போதும் மூச்சு தடைபடும், எனவே இந்த நிலைகளில் நாம் பிரக்ஞையுடன் மூச்சு விட்டுக் கொண்டிருக்கவேண்டும்.
கண்களும் கவனமும்: இந்த முத்திரையை கடைபிடிக்கும்போதும் பிறகு அதிலிருந்து விடுபடும்போதும் முகம் எந்தப்பக்கம் திரும்புகிறதோ பார்வையும் அந்த பக்கமே இருக்க வேண்டியது அவசியம்.
எச்சரிக்கை:
பிரம்ம முத்திரையை தனித்துவமாக செய்ய வேண்டும். முத்திரையின் ஒவ்வொரு கட்டத்திலும் 3 அல்லது 5 மூச்சுக்காற்று நேரம் அந்த நிலையில் இருக்க வேண்டும். இதே போல் 3 முதல் 5 சுற்றுக்கள் வரை செய்யலாம்.
பலன்கள்: கழுத்தை இருபுறமும் திருப்பி பிறகு பின் பக்கமாகவும் முன் பக்கமாகவும் சாய்த்து செய்வதால் கழுத்துத் தசைகள் நன்றாக வளைந்து கொடுக்கும் தன்மையை அடையும்.
கழுத்து மற்றும் தொண்டைப் பகுதியில் ரத்த ஓட்டத் தடை ஏற்பட்டால் அது நீங்கும். மூளையிலிருந்து துவங்கி காது, மூக்கு, கண்கள், நாக்கு மற்றும் இன்னபிற புலனுறுப்புக்கள் வரை செல்லும் மண்டை நரம்புகள் செயலூக்கம் பெறும்.
வீக்கம், எரிச்சல் மற்றும் தொண்டை அழற்சி ஆகியவற்றிலிருந்து இந்த முத்திரை நம்மை காக்கும்.
எச்சரிக்கை: கழுத்தில் பிடிப்பு ஏற்பட்டிருந்தால் முன்னால் வளையும் நிலையை செய்யாமல் மற்றவற்றை செய்யலாம்.