உடலுக்கு உகந்த பழக்கவழக்கங்கள்
வெள்ளி, 8 ஜனவரி 2010 (12:25 IST)
முந்தைய காலத்தில் உடலுக்கு ஏற்ற பல பழக்கவழக்கங்களை பின்பற்றி வந்தனர். வெற்றிலை போடுவது உடலுகுக்கு மிகவும் நல்லது. இது ஜீரண சக்தியை அதிகப்படுத்தும். அதேபோல அடிக்கடி சளி பிடிக்காது.
வாழைப் பழத்தை பற்களால் கடித்து சாப்பிடுவதை விட, நாக்கால் நசுக்கிச் சாப்பிடுவது நல்லது. வாழைப் பழத்தின் தோலில் இருக்கும் ஃபைபரும் உடலுக்கு நல்லது. பச்சைக் காய்கறிகளை நன்கு கடித்து சாப்பிடுவதுநல்லது. அது மட்டுமல்லாமல் பற்களுக்கும் நல்ல பயிற்சியாக இது அமைகிறது.
வாரத்தில் 2 நாள் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது மிகவும் அவசியம். ஆண்கள் புதனும், சனியும், பெண்கள் செவ்வாயும், வெள்ளியும் எண்ணெய் வைத்து குளிக்க வேண்டும்.
தலைக்கும், உடலுக்கும் எண்ணெய் வைத்து நன்கு தேய்த்துக் குளிக்க வேண்டியது அவசியம். தற்போது இதனை யாரும் செய்வதில்லை. அதனால்தான் பலருக்கும் மூட்டுகளில் வலி ஏற்படுகிறது. எலும்புத் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
ஆசனம் என்பது உடலை வளப்படுத்துவதாகும். ஆனால் அந்த உடல் ஆரோக்கியமாக இருக்க உணவுப் பழக்க வழக்கமும், நல்ல பழக்கங்களும் அவசியம்.
யோகாவில் வெறும் ஆசனம் மட்டும் கற்றுத்தரப்படுவதில்லை. உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பது பற்றியும் கற்றுத்தரப்படுகிறது. உடலையும், மனதையும் தூய்மையாக வைத்துக் கொண்ட பிறகுதான் ஆசனம் பயிலத் துவங்க வேண்டும்.
யோகா என்பது பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே பயிற்றுவிக்கப்பட்டு உள்ளது. பல ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு இன்றும் நம்மிடையே யோகா இருக்கிறது என்றால் அதன் முக்கியத்துவத்தை அறியலாம்.
உடல் மெலிந்து இருந்தாலும் சரி, குண்டாக இருந்தாலும் சரி அவர் ஆரோக்கியமாக இருக்கிறாரா என்பதுதான் முக்கியம். தொப்பை இருந்தாலும் கூட அது பெரிய பிரச்சினையாகக் கருத முடியாது. பிரணயாமம் செய்பவர்களுக்கும் தொப்பைப் போடும். தொப்பை என்பது வியாதி அல்ல. அதனால் தொப்பைப் போடுவதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.
அதேப்போல குழந்தைகளுக்கு யோகாகற்றுக் கொடுப்பதில் வேறுபாடு உள்ளது. அதாவது ஒரு குழந்தை அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருப்பதை விரும்பும். அதைப் பிடித்து உட்கார வைத்து யோகா கற்றுக் கொடுத்தால் அதனால் கற்றுக் கொள்ள முடியாது.
தன்னை மறந்து விளையாடும் சூழ்நிலையில் உடல் அதிகமாக களைத்து அவனாகவே அமரும் போதுதான் யோகாவை நாம் பயிற்றுவிக்க முடியும். எனவே சிறு குழந்தைகளைக் கொண்டு வந்த யோகா கற்றுக் கொடுங்கள் என்று கூறுவதும் தவறானப் பழக்கமாகும்.