’இந்தியாவின் ஒத்துழைப்பின்றி யுத்தத்தை வென்றிருக்க முடியாது’ - பசில் ராஜபக்சே

வியாழன், 4 ஜூன் 2015 (17:04 IST)
இந்தியாவின் ஒத்துழைப்பின்றி யுத்தத்தை வென்றிருக்க முடியாது என்று இலங்கை முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சே கருத்து தெரிவித்துள்ளார்.
 
இலங்கை முன்னாள் அமைச்சரும், மகிந்த ராஜபக்சேவின் சகோதரருமான பசில் ராஜபக்சே தற்போது விசாரணை காவலில் வைக்கப்பட்டுள்ளார். தற்போது, விசாரணை காவலில் இருந்து தடுத்து வைக்கப்பட்டுள்ள பசில், கொழும்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
 
இந்நிலையில், முன்னாள் மூத்த அமைச்சர் ஒருவரிடம் கூறியுள்ள பசில் ராஜபக்சே, “இந்தியா எமக்கு வழங்கிய சில உதவிகளை அவர்களினால் பகிரங்கமாக வெளியிட முடியாது எனவும் அவ்வாறான உதவிகள் காரணமாகவே யுத்தம் வெற்றி கொள்ளப்பட்டது.
 
அந்த உதவிகளை மறந்து விட்டு செயற்பட்டதுதான் நாம் செய்த பெரிய பிழை. தேர்தல் தோல்விக்கு என்னை பலரும் குற்றம் சுமத்திய போதிலும், இந்தியாவை பகைத்துக் கொண்டதுதான் முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
 
இந்தியா உதவிகளை இலவச அடிப்படையில் வழங்கியது. சீனா பணத்தைப் பெற்றுக்கொண்டே உதவிகளை வழங்கியது. எனினும், தோல்விக்கான குற்றச்சாட்டை நான் ஏற்றுக்கொள்கிறேன்” என்று தெரிவித்ததாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
 

வெப்துனியாவைப் படிக்கவும்