இந்தோனேஷியாவில் சுட்டுக்கொல்லப்பட்ட எட்டு பேரும் யார் யார்? - முழு விவரம்

புதன், 29 ஏப்ரல் 2015 (12:49 IST)
இந்தோனேஷியாவில் போதைப்பொருட்கள் கடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்ட எட்டு பேரும் யார் யார் என்ற முழு விவரம் கொடுக்கப்பட்டுள்ளது.
 
1. மயூரன் சுகுமாரன் (34) : இலங்கை வம்சாவளித் தமிழரான இவர், ஆஸ்திரேலிய குடியுரிமையுடன் சிட்னியில் பெற்றோருடன் வசித்து வந்தவர். 2005ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டார். சிறைச்சாலையில் ஓவியங்கள் வரையும் திறமைகளை வளர்த்துக் கொண்ட மயூரனின் ஓவியங்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தன.
 

 
2. ஆண்ட்ரூ சான் (31) : சீன வம்சாவளியைச் சேர்ந்தவரான இவர் ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்றவர் ஆவார். போதைப்பொருள் வைத்திருக்காவிட்டாலும், அதனைக் கடத்த முற்பட்டார் என்ற குற்றச்சாட்டுக்காக மயூரனுடன் கைது செய்யப்பட்டார். மதப் போதகராக மாற வேண்டும் என்று ஆசைப்பட்டவர். திருமணத்திற்கு முந்தைய நாள் தமது காதலியைக் கரம்பற்றினார்.
 
3. மேரி ஜேன் வெலோசோ (30) : இவர் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர் ஆவார். 2010ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டிருந்தார். போதைப்பொருள் பாக்கெட்டுகளை கொண்டு செல்பவராக சித்தரிக்கப்பட்டவர். இவர் தனது வறுமை காரணமாக கடத்தல்காரர்களின் வலையில் சிக்கினார் என நண்பர்கள் கூறுகின்றனர்.
 
4. மார்ட்டின் ஆண்டர்சன் (50) : இவர் நைஜீரிய நாட்டைச் சேர்ந்தவர் ஆவார். போலி கடவுச் சீட்டில் இந்தோனேஷியா சென்றவர். 2004ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
 
5. ரஹீம் சலாமி (50) : இவரும் நைஜீரியாவைச் சேர்ந்தவர். பாங்காங்கில் நிர்க்கதியாக வாழ்ந்தவர். இந்தோனேஷியாவிற்கு கொஞ்சம் ஆடைகளை கொண்டு சென்றால், 400 டாலர்கள் தருவேன் என்று கூறிய புதிய நண்பனை நம்பி ஏமாந்தவர். எனினும், இவர் ஆடைகளுக்குள் போதைப்பொருள் இருந்ததை அறியவில்லை என தெரிவித்திருந்தார்.
 
6. சில்வெஸ்டர் வொலிசே (47) : இவரும் நைஜீரியப் பிரஜையே. 2002ஆம் ஆண்டு கைதானார். இந்தோனேஷியாவிற்குள் போதைப்பொருளைக் கடத்திய குற்றத்திற்காக மரணதண்டனை விதிக்கப்பட்டவர்.
 
7. ஒக்வூடிலி ஒயடான்ஸே (41) : இவரும் நைஜீரிய நாட்டைச் சேர்ந்தவரே. இவர், 2002இல் கைது செய்யப்பட்டிருந்தார். தாம் வேலை செய்த ஆடை தயாரிப்பகம் மூடப்பட்டதை அடுத்து போதைப் பொருள் கடத்தல் காசு தரும் என நம்பியவர்.
 
8. செய்னல் அபிதீன் (50) : இவர் இந்தோனேஷிய நாட்டைச் சேர்ந்தவர். இவர் 2001இல் கைதானவர். தம்மீதான குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து நிராகரித்து வந்தவர். உண்மையான குற்றவாளிகள் தண்டனை அனுபவித்து விட்டு விடுதலை பெற்றுள்ளதாக குற்றம் சாட்டினார்.
 
9. செர்கி அட்லூயி : இவர் பிரான்ஸைச் சேர்ந்தவர். போதையூட்டும் பொருட்கள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட தொழிற்சாலையில் வேலை செய்தபோது கைது செய்யப்பட்டிருந்தார். தாம் வேல்டிங் பணியாளராக வேலை செய்ததாகவும் தொழிற்சாலையின் சட்டவிரோத செயற்பாடுகள் பற்றி தாம் அறிந்திருக்கவில்லை எனவும் இவர் கூறுகிறார்.
 
செர்கியும் மரண தண்டனை நிச்சயிக்கப்பட்ட கைதியாவார். ஆனால் இவருடைய மேல் முறையீட்டு மனுவிலுள்ள சிக்கல் காரணமாக தண்டனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்