‘ஹவுடி மோடி’ நிகழ்ச்சிக்காக அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வரவேற்று பேசினார். அப்போது இந்தியாவிற்கு வருகை தருமாறு ட்ரம்புக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் பிரதமர் மோடியும், அதிபர் ட்ரம்ப்பும் தொலைபேசி வழியாக பேசியுள்ளனர். இந்நிலையில் பிப்ரவரி 24 மற்றும் 25ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் இந்தியாவிற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பிப்ரவரி 24ல் தனது மனைவி மெலானியாவுடன் இந்தியா வரும் ட்ரம்ப் டெல்லி மற்றும் குஜராத் ஆகிய பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதனால் டெல்லி மற்றும் குஜராத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன. முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா 2014 இந்திய பயணத்திற்கு பிறகு தற்போது ட்ரம்ப் இந்தியாவுக்கு வருகை தருவது குறிப்பிடத்தக்கது.