இலங்கையில் 23 சதவீதத்தினர் ஊட்டச்சத்து குறைபாட்டால் அவதி

திங்கள், 5 அக்டோபர் 2015 (19:21 IST)
இலங்கையில் உணவு பாதுகாப்பு மற்றும் நிலையான விவசாயத்தை மேற்கொள்வதற்கான தேசிய மட்டத்திலான உணவு உற்பத்தித் திட்டத்தை கிளிநொச்சியில் ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாட்டில் 23 சதவிகிதம் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள் என தெரிவித்திருக்கின்றார்.

இந்த நிலைமைக்கான மக்களுடைய வறுமையைப் போக்குவதற்கு ஓரு யுத்தத்தை நடத்துவதைப் போலவே இந்த தேசிய உணவு உற்பத்தித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் சிறிசேன கூறியிருக்கின்றார்.
 
கிளிநொச்சி மாவட்டத்தில் வடமாகாணத்தின் பெரிய குளமாகிய இரணைமடு குளத்தின் கீழ் விவசாயம் செய்யப்படுகின்ற வட்டக்கச்சி வயற்பகுதியில் தேசிய உணவு உற்பத்தித்திட்டத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வைபவரீதியாக ஆரம்பித்து வைத்தார்.
 
நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய உணவுப் பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதாகவும், இதற்கென கடந்த 2004 ஆம் ஆண்டு மாத்திரம் 6 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
 
உள்ளுரில் உணவு உற்பத்தியை அதிகரித்து, இவ்வாறாக வீணாக்கப்படுகின்ற அந்நியச் செலவாணியை மிச்சப்படுத்துவதற்கு அனைவரும் முன்வர வேண்டும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
நாட்டில் உள்ள அரச மற்றும் தனியாருக்குச் சொந்தமான உணவு உற்பத்தி செய்யக்கூடிய காணிகளில் ஒவ்வொரு அங்குல நிலமும் விவசாயம் செய்வதற்காகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும், அவ்வாறு பயன்படுத்தப்படாத தனியார் காணிகளை அவர்களிடமிருந்து எடுத்து வேறு ஆட்களின் மூலமாக உணவு உற்பத்தி மேற்கொள்ளப்படும் என்றும் சிறிசேன எச்சரிக்கை விடுத்தார்.
 
இந்த வைபவத்தில் கலந்து கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால மற்றும் அமைச்சர்கள் அதிகாரிகள் குழுவினரை வரவேற்ற வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டுக்கு சௌபாக்கியத்தையும் சமாதானத்தையும் கொண்டு வருவார் என்ற எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் தமக்கு இருப்பதாகத் தெரிவித்திருக்கின்றார்.
 
தேசிய உணவு உற்பத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் ஆரம்ப வைபவத்தில் விவசாய அமைச்சர் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்களும், வடமாகாண அமைச்சர்கள் உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இதேவேளை, வட்டக்கச்சியில் இடம்பெற்ற தேசிய மட்டத்திலான இந்த நிகழ்வில் கிளிநொச்சி முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் இராணுவத்தினருடைய பயன்பாட்டில் இருந்த சுமார் 600 ஏக்கர் காணிகள் அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டிருக்கின்றன.
 
இதற்கான சான்றிதழ்கள் உரியவர்களிடம் ஜனாதிபதியினால் வழங்கப்பட்டன.

வெப்துனியாவைப் படிக்கவும்