அமெரிக்காவின் அதிபராக தொடர்ந்து இருமுறை பதவி வகித்தவர் டொனால்டு ட்ரம்ப். பெரும் தொழிலதிபரான ட்ரம்ப் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் அடிக்கடி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தும். அந்த வகையில் சில மாதங்கள் முன்பாக ஆபாச பட நடிகையோடு அவர் உல்லாசமாக இருந்துவிட்டு அதை வெளியே சொல்லாமல் இருக்க தேர்தல் பிரச்சார நிதியிலிருந்து பணம் கொடுத்ததாக வழக்குத் தொடரப்பட்டது.
வாழ்வில் பல சர்ச்சைகளை கொண்ட டொனால்ட் ட்ரம்ப்பின் வாழ்க்கை வரலாற்றை ஹாலிவுட் இயக்குனர் அலி அப்பாஸி இயக்கியுள்ளார். இந்த படத்தில் டொனால்ட் ட்ரம்ப்பாக செபாஸ்டியன் ஸ்டான் நடித்துள்ளார். இந்த படம் சமீபத்தில் கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறப்புக்காட்சியாக திரையிடப்பட்டது. அதில் ட்ரம்ப் சில பெண்களை பாலியல் வன்கொடுமை செய்வது போல காட்சிகள் உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ட்ரம்ப்பின் முன்னாள் மனைவி இவானா முன்னதாக தான் விவாகரத்து பெறும்போது ட்ரம்ப் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார். தற்போது அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட ட்ரம்ப் தீவிரமாக தயாராகி வரும் நிலையில் இந்த படம் வெளியானால் ட்ரம்ப்க்கு பெருத்த பின்னடைவு ஏற்படும் என கூறப்படுகிறது. இதனால் இந்த படத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக ட்ரம்ப்பின் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.