சிரியா மீதான போர்தாக்குதல்களில் அப்பாவி பொதுமக்கள் பலியாகி விடுகின்றனர். கடந்த ஆண்டு அய்லான் குர்தி என்ற சிறுவன் கடற்கரையில் பிணமாக கிடந்த புகைப்படம் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு கட்டிடங்களின் இடிபாடுகளுக்கு இடையே மீட்கப்பட்ட சிறுவன் ஒம்ரான் டாக்னீஷ் என்ற சிறுவனின் புகைப்படம் வெளியாகி அதிர்ச்சி அடைய செய்தது.
அந்த புகைப்படத்தில் தூசி படிந்த உடலில் தலையில் ரத்த காயங்களுடன் அச்சிறுவன் அமர்ந்திருக்கிறான். அடிக்கடி தனது காயங்களை தொட்டுப் பார்கிறான். இந்த புகைப்படம்தான் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது.
இந்நிலையில், இந்த பையனை (ஒம்ரான்) புகைப்படம் எடுத்தவர் மஹ்மூத் ரிஸ்லான். இவர், புகைப்படம் எடுக்கப்பட்டபோது நேர்ந்த, தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அதன் விவரம் கீழே:
நான் இந்த தாக்குதல் நடந்த இடத்தில் இருந்து வெறும் 300 மீட்டர் தூரத்திலேயே வசிக்கிறேன். அன்று ஒரு 7 மணி இருக்கும், நான் தொழுகை முடிந்து வெளியே வரும் போது பெரும் இறைச்சலுடன் குண்டுவெடிப்பு சத்தம் ஒன்று கேட்கிறது. உடனே நானும் எனது மூன்று ஊடக நண்பர்களும் ஸ்தலத்திற்கு விரைந்தோம்.
போகும்போதே மூன்று உயிரற்ற உடல்கள் அம்புலன்ஸ் வண்டியில் ஏற்றப்பட்டுவதற்காக தரையில் கிடத்தப்பட்டிருந்தன. அவர்கள் ஒம்ரானின் அயலவர்கள். அந்த 6மாடி கட்டடம் முற்றுமுழுதாக அழிக்கப்பட்டு கற்குவியலாக காட்சியளித்தது.
அதற்கு பக்கத்தில் அரைவாசி சிதைவடைந்து ஒரு கட்டிடம் காணப்படுகிறது. அதுதான் ஒம்ரானின் வீடு. ஒம்ரானின் வீட்டு மாடிப்படிகள் உடைந்து நொறுங்கிவிட்டதால், பக்கத்தில் இருக்கும் வீட்டு மாடியூடாக ஏறி உள்ளிருந்தவர்களை காப்பற்ற White Helmet தொண்டர்கள் முயற்சி செய்துகொண்டிருந்தனர். நானும் அவர்களுடன் இணைந்தேன்.
கற்குவியலுக்குள் இருந்து முதன்முதலாக தூக்கப்பட்டது ஒம்ரான்தான். உடனே நான் எனது வீடியோ கமராவை எடுத்து பதிவு செய்ய துவங்கினேன். அவன் நான்கு வயது என்பதையும் பிறகுதான் அறிந்துகொண்டேன்.
அவர்கள் பையனை தூக்கும்போது கடும் இருட்டாக இருந்தது. எனினும் நான் நிறுத்தவில்லை. அவனை white helmet ஒரு அம்புலன்ஸிற்கு எடுத்துசென்று அதில் இருந்த ஒரு கதிரையில் உட்கார வைக்கின்றனர். நான் ரெக்கோடிங்கை நிறுத்தவில்லை. எந்தளவு இந்த சிறுவன் பாதிக்கப்பட்டிருக்கிறான் என்பதை அவதானித்த உடன் வீடியோவை நிறுத்திவிட்டு அவனை புகைப்படம் எடுக்க ஆரம்பித்தேன்.
அவனை புகைப்படம் எடுக்கும் போதே எனது கண்களில் இருந்து கண்ணீர் சொட்ட ஆரம்பித்துவிட்டது. இத்தனைக்கும் இது நான் அழுத முதல் சம்பவமும் அல்ல. இதற்கு முன் இந்த யுத்ததில் பாதிக்கப்பட்ட பிஞ்சு குழந்தைகளை புகைப்படம் எடுக்கும் போதெல்லாம் தேம்பித்தேம்பி பல முறை அழுதிருக்கிறேன். இங்கு அழாத எந்த ஊடகவியலாளனும் இருக்கமாட்டார்கள். ஆனால் நேற்று எல்லோரும் சேர்ந்து அழுதோம்.
நாம் எல்லோரும் அழுவதற்குகாரணம், அந்த பிஞ்சு குழந்தையின் முகம் கிழிக்கப்பட்டிருந்தும் ஒருமுறை கூட அந்த குழந்தை அழவும் இல்லை ஒரு வார்த்தையும் பேசவும் இல்லை, எல்லோரையும் பார்த்துக்கொண்டு அதிர்ச்சியில் அமைதியாக இருந்தான்
ஒம்ரான் காப்பற்றப்பட்டிருந்தது ஒரு ரஷ்யா விமானதாக்குதலின் பின்னராகும்.
ஒம்ரானை பார்க்கும் போது உடனே எனக்கு 7 நாட்களே ஆன எனது பெண்குழந்தையே ஞாபகம் வந்தது. ஒரு நாள் இது எனது குழந்தையாகவும் இருக்கலாம் அல்லது சிரியாவின் அலெப்போவில் உள்ள வேறெந்த குழந்தையாகவும் இருக்கலாம் அல்லவா!!
White Helmets team அவனின் குடும்பத்தை காப்பாற்ற தொடர்ந்தும் முயற்சித்துக்கொண்டிருந்தனர். 11 வயதான அவனின் சகோதரியை வெளியே எடுத்தனர். எனது கமராவை கண்டவுடன் போட்டோ எடுக்கவேண்டாம் என்றாள். சரிம்மா நான் எடுக்கல என்று கேமராவை அனைத்து வைத்தேன்.
அல்லாவுக்கே எல்லா புகழும்!! ஒம்ரானின் குடும்பத்தில் ஒருவரும் மரணிக்கவில்லை. அவனது தாயின் கால் உடைந்து போயிருந்தது. தந்தைக்கு தலையில் சிறிய காயம்தான். அவனின் 7 வயது சகோதரிக்கு அறுவை சிகிச்சை முடிந்து நன்றாக இருக்கிறாள்
உலகம் முழுவதும் இந்த புகைப்படம் பற்றிய பேச்சு நடக்கின்றன என்பதை அடுத்த நாள் காலையில் எழும்பிய பின்னரே தெரிந்துகொண்டேன். இதை மாத்திரம் அல்ல, இப்படியான ஒவ்வொரு சிரியாவின் சிறுவர்களையும் உலகம் பேச வேண்டும். அதன் மூலம் இங்கு நடக்கும் அநியாயங்களையும் வேறு என்ன நடக்கின்றது என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று எனக்குள் நானே சொல்லிக்கொண்டேன்.
உலகம் மக்கள் இங்கு நடப்பதை அறிந்தால், ஒருவேளை இந்த பாழாய்போன யுத்தம் நிறுத்தப்படுவதுடன் குண்டுகள் வெடிக்காமல், உலகின் மற்றய சிறுவர்களை போலவே ஒம்ரானும் எனது மகள் அமலும் இந்த மண்ணில் ஓடியாடி விளையாடகூடும் என்பதே எனது அவா.