பாஜக எம்.பி தருண் விஜய்க்கு தமிழ் சாகித்ய விழா விருது: இலங்கை அரசு கௌரவம்

வியாழன், 5 நவம்பர் 2015 (08:59 IST)
இலங்கையில் நடைபெற்ற விழாவில் திருக்குறளுக்காக தொடர்ந்து பணியாற்றி வரும் பாஜக எம்.பி தருண் விஜய்க்கு தமிழ் சாகித்ய விழா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.


 

 
இலங்கை கொழும்பு அருகேயுள்ள கண்டியில்  மத்திய மாகாண தமிழ் சாகித்ய விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தருண் விஜய் பங்கேற்றார். 
 
அப்போது, தமிழுக்காக குரல் கொடுத்து வரும், உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தருண் விஜய்க்கு இலங்கை மத்திய மாகாண சுற்றுச்சூழல் மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ராமேஸ்வரன் விருது வழங்கினார்.
 
அந்த நிகழ்ச்சியில் தருண் விஜய் பேசியதாவது:-
 
"புத்தரும், திருவள்ளுவரும் அமைதியையும்,  சகோதரத்துவத்தையும் வலியுறுத்திய இரண்டு பெரிய மகான்கள்.
 
மதுரையில் நவம்பர் 1 ஆம் தேதி நடைபெற்ற திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் குறள்களை ஒப்புவித்த 133 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
 
அவர்கள் நாடாளுமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி மூலம் விரைவில் பாராட்டப்பட உள்ளனர்" என்று கூறினார்.
 
மேலும், இலங்கையில் தமிழக மீனவர்கள் சிறையில் அடைப்பட்டிருப்பது கவலை தருவதாகவும், இலங்கை அரசு அவர்களை விரைவில் விடுதலை செய்ய உதவும் என்று நம்பிக்கை உள்ளது என்றும் தருண் விஜய் அப்போது கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்