கோடரியால் வெட்டப்பட்ட, இலங்கை அதிபர் சிறிசேனாவின் தம்பி உயிரிழந்தார்

சனி, 28 மார்ச் 2015 (10:41 IST)
தலையில் கோடரியால் வெட்டப்பட்ட, இலங்கை அதிபரின் தம்பி பிரியந்தா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
 
இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் தம்பி பிரியந்தா சிறிசேனா. இவர், பொலன்னருவா மாவட்டத்தில் மணல் குவாரி நடத்தி வருகிறார். அவரை "மணல் ராஜா" என்று செல்லமாக அழைக்கப்படடுவதாகக் கூறப்படுகிறது. 
 
இவர் பொலன்னருவாவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். பிரியந்தாவின் நெருங்கிய நண்பர் லக்மல். அவரது வீடு, பாகமுனா என்ற இடத்தில் உள்ளது.
 
இந்நிலையில் நேற்று முன்தினம், பிரியந்தா அங்கு சென்றிருந்தார். அங்கு அவருக்கும், நண்பர் லக்மலுக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. ஒரு கோடரியை எடுத்து, பிரியந்தாவின் தலையில் லக்மல் வெட்டினார். இதில், பிரியந்தாவின் தலையிலிருந்து ரத்தம் கொட்டியது.
 
இதைத் தொடர்ந்து,  அவர் பொலன்னருவாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் இரவு, அங்கிருந்து விமானம் மூலம் கொழும்பு நகருக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். 
 
பிரியந்தாவை வெட்டிய அவருடைய நண்பர் லக்மல், பாகமுனா காவல்துறையினரிடம் சரண் அடைந்தார். அவரை கைது செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
சிறிசேனாவின் சகோதரர் பிரியந்தா, மணல் குவாரி நடத்தி வருவதால், மணல் அள்ளுவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இலங்கை அதிபர் சிறிசேனா தற்போது சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்