இலங்கையில் அதிபர் தேர்தல் வாக்குப் பதிவு: கள்ள ஓட்டு போட்டால் தலையில் சுட உத்தரவு

வியாழன், 8 ஜனவரி 2015 (10:51 IST)
இலங்கையில் நடைபெற்றுவரும் அதிபர் தேர்தலின் போது யாரேனும் கள்ள ஓட்டு போட முயற்சி செய்தால் அவர்களை தலையில் சுட காவல்துறையினருக்கு தேர்தல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
 
இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. இதனால் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
 
இது குறித்து தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
வாக்களிப்பது என்பது ஒருவருடைய விருப்பம். அந்த விருப்பத்தை பலவந்தமாகவோ அல்லது முறைகேடாகவோ அபகரிக்க முடியாது. 
 
கள்ள ஓட்டுப் போடுவதற்கு யாராவது வந்தால் வழக்கம் போல முழங்காலுக்கு கீழே சுடுவதால் பயனில்லை. அதனால் கள்ள ஓட்டும் நபர்களுடைய தலையில் சுடுமாறு காவலதுறையினருக்கு உத்தரவிட்டுள்ளேன்.
 
வடக்கு, கிழக்கு பகுதிகளில் வாக்களிப்பின் போது இராணுவத் தலையீட்டை அனுமதிக்க முடியாது. வாக்களிப்பதை ராணுவம் தடுக்கக் கூடாது.
 
வன்முறை நடைபெறும் இடங்களில் தேர்தல் ரத்து செய்யப்படும். வாக்குப் பதிவு முடிவடைந்து 3 மணி நேரத்துக்குப் பின்னர் வாக்குகள் எண்ணப்படும். இவ்வாறு மகிந்த தேசப்பிரியா கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்