தமிழக மீனவர்களை சுட்டு வீழ்த்துங்கள்: இலங்கை அமைச்சர் ஆணவ பேச்சு

ஞாயிறு, 24 ஜூலை 2016 (12:42 IST)
எல்லை தாண்டி வரும் தமிழக மீனவர்களை சுட்டு வீழ்த்துங்கள் என இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் மகிந்தா சமர வீரா கூறியுள்ளது தமிழக மீனவர்கள் மத்தியில் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


 
 
இலங்கை அரசால் கைது செய்யப்படும் தமிழக மீனர்வர்களையும் அவர்களது படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரத்தில் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்துள்ள அவர்கள், இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் விடுவிக்கப்படாததால் சேதமடைந்துள்ளன, அவற்றின் உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
மீனவர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இலங்கை அரசுக்கு மத்திய அரசு எழுதிய கடிதத்தின் அடிப்படையில் 73 மீனவர்களும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என இலங்கை மீன்வளத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
 
இந்நிலையில், இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் மகிந்தா சமர வீரா கூறிய கருத்து மீனவர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை விடுவிக்கும் பேச்சுக்கே இடமில்லை. எல்லை தாண்டி வரும் தமிழக மீனவர்களை கைது செய்தால் மட்டும் போதாது. அவர்களைச் சுட்டு வீழ்த்த வேண்டும் என்று அவர் கூறி உள்ளார்.
 
பாரம்பரிய கடல் பகுதியில் மீன் பிடிக்க செல்லும்போது தாக்கப்படுவது வேதனையானது. இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் தமிழக மீனவர்கள் பல மாதங்களாக சிறையில் வடுகின்றனர். படகுகள் விடுவிக்கப்படாததால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் அவர்களை சூட்டு வீழ்த்து சொல்லும் இலங்கை அமைச்சரின் பேச்சு மிகுந்த வேதனையை அளிக்கிறது கண்டனத்துக்குறியது என மீனவர் சங்க தலைவர்கள் கூறியுள்ளனர்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்