உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டுபிடிக்க உலக நாடுகள் தீவிரமாக முயற்சித்து வரும் நிலையில், ரஷ்யா தனது ஸ்புட்னிக் தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது.
முன்னதாக இந்த தடுப்பூசி மீது பல விமர்சனங்கள் எழுந்தாலும், பிறகு இது பாதுகாப்பானது என உலக சுகாதார அமைப்பே பாராட்டியுள்ளது. இதனோடு கொரோனாவுக்கு எதிராக செயல்படும் இரண்டாவது தடுப்பூசியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்தார்.
வெக்டர் ஆய்வு மையத்தின் “எபிவாகொரோனா” என்ற இந்த தடுப்பூசி சிறப்பாக செயல்படுவதாகவும், அக்டோபர் 15-க்குள் இதனை பதிவு செய்யும் பணிகள் முடிய உள்ளதாகவும் அவர் முன்னரே தெரிவித்தார். இந்நிலையில், கொரோனா வைரஸுக்கு எதிராக இரண்டாவது தடுப்பூசியையும் உருவாக்கிவிட்டதாக ரஷிய அதிபர் அதிரடியாக தெரிவித்துள்ளார்.
தற்போது இந்த தடுப்பூசி அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ள போதும் இதன் மூன்றாம் கட்ட பரிசோதனைகள் இன்னும் துவங்கவில்லை. மேலும், முதல் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனைகள் முடிவுகளும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.