இலங்கைக்கு ஆதரவாக ஐ.நா.மனித உரிமை கவுன்சிலில் தீர்மானம்: தமிழர்கள் அதிருப்தி

வெள்ளி, 24 மார்ச் 2017 (06:04 IST)
ஐ.நா. மனித உரிமை கமிஷனில் இலங்கைக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேறியது. இந்த தீர்மானத்திற்கு ஓட்டெட்டுப்பு நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



இலங்கையில் இறுதிக்கட்ட போரின்போது இலங்கை ராணுவம் போர்க்குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டது குறித்து விசாரணை செய்ய வெளிநாட்டு நீதிபதிகள் தேவையில்லை என்றும் தாங்களே விசாரணை நடத்தப்போவதாகவும் இலங்கை கூறி வந்தது.

இந்த நிலையில் இதுகுறித்து விசாரணை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி ஜெனீவா நகரில் தற்போது நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில், “இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்பு கூறல், மனித உரிமைகளை மேம்படுத்துதல்” என்ற பெயரில் அமெரிக்கா, இங்கிலாந்து, மான்டனெக்ரோ, மாசிடோனியா ஆகிய நாடுகளின் சார்பில் தீர்மானம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த தீர்மானம் இலங்கைக்கு சாதகமானது என்பதால் இந்தியா இந்த தீர்மானத்தை எதிர்க்க வேண்டும் என தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தன.

ஆனால் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு 2 ஆண்டுகள் அவகாசம் அளிக்க வகை செய்யும் இந்த தீர்மானம் நேற்று ஓட்டெடுப்பு எதுவும் இன்றி நிறைவேறியது. மொத்தம் 40 நாடுகள் ஆதரவு தெரிவித்ததால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்