’குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள தயார்’ - கருணா அம்மான்

திங்கள், 5 அக்டோபர் 2015 (17:06 IST)
தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரணைகளை எதிர்கொள்ள தயார் என முன்னாள் அமைச்சர் கருணா அம்மான் தெரிவித்துள்ளார்.
 

 
அண்மையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் வெளியிடப்பட்ட விசாரணை அறிக்கையில் கருணாவிற்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன.
 
இந்தக் குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் தாம் நிராகரிப்பதாகத் தெரிவித்துள்ளார். சிறுவர்களை படையில் இணைத்துக் கொள்ளல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் கருணாவிற்கு எதிராக சுமத்தப்பட்டிருந்தது.
 
தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து பிளவடைந்த உடன் தாம் இந்தியாவிற்கு தப்பிச் சென்றதாகத் தெரிவித்துள்ளார். இந்தியாவிலிருந்து நாடு திரும்பியதும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டு பிரதான அரசியல் நீரோட்டத்தில் கலந்ததாகத் தெரிவித்துள்ளார்.
 
தாம் எந்தவொரு துணை இராணுவக் குழுவினையும் உருவாக்கவில்லை எனவும், குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
கருணா குழு என ஐக்கிய நாடுகள் அமைப்பின் அறிக்கையில் குற்றம் சுமத்தப்பட்ட போதிலும் தமக்கு அவ்வாறான ஓர் குழு பற்றி தெரியாது என அவர் தெரிவித்துள்ளார்.
 
விசாரணைகள் நடத்தப்பட்டால் அதனை எதிர்நோக்குவதில் எவ்வித பிரச்சினையும் கிடையாது எனவும், விசாரணைகளை எதிர்நோக்கத் தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்