பாரீஸில் தற்கொலை வெடிகுண்டுடன் இருந்த பெண் தீவிரவாதி உள்ளிட்ட 3 பேர் சுட்டுக் கொலை

புதன், 18 நவம்பர் 2015 (13:41 IST)
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் தற்கொலை வெடிகுண்டுடன் இருந்த பெண் தீவிரவாதி உள்பட 3 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.


 
 
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த வெள்ளிக்கிழமை ஐஎஸ். தீவிரவாதிகள் பல்வேறு இடங்களில் நடத்திய தாக்குதலில் 129 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர்.
 
இதைத் தொடர்ந்து, பாதுகாப்பு கருதி நாட்டின் எல்லைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
 
இந்தத் தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகளையும், அவர்களுடன் தொடர்புடையவர்களையும் தேடும்பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. 
 
இந்நிரைலயில், பாரீஸ் புறநகர் பகுதியான செயின்ட்-டெனிஸில் தேடுதல் வேட்டையில் பிரான்ஸ் காவல்துறையினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மறைந்திருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். 
 
இதைத் தொடர்ந்து, இருதரப்பு இடையே துப்பாக்கி சண்டை தீவரமாக நடைபெற்றது. இந்த துப்பாக்கி சண்டையில் காவல்துறை அதிகாரிகள் காயம் அடைந்ததாக கூறப்பட்டது.
 
இதனால், பொதுமக்களை வெளியே வரவேண்டாம் என்று காவல்துறையினர் கேட்டுக் கொண்டனர். மேலும், மக்கள் ஜன்னல்களை திறக்க வேண்டாம் என்றும் கேட்டு கொண்டனர்.
 
தீவிரவாதிகள் பதுங்கியிருந்து துப்பாக்கி சூடு நடத்திய இடத்தை பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்தனர்.
 
இந்நிலையில், காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் "தற்கொலை வெடிகுண்டுடன் இருந்த பெண் தீவிரவாதி உள்பட 3 பேர்" சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்