பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பதவி நீக்கம்: நீதிமன்றம் அதிரடி!

வெள்ளி, 28 ஜூலை 2017 (13:00 IST)
பாகிஸ்தான் பிரதமர் நவஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது குற்றம் சாட்டப்பட்ட பனாமா பேப்பர்ஸ் மோசடி வழக்கில் தற்போது தீர்ப்பு வெளியாகி அவர் குற்றவாளி என்பது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து அவர் பிரதமர் பதவியிலிருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


 
 
பனாமாவில் உள்ள மோசக் பொன்சிகா என்ற பிரபலமான சட்ட நிறுவனம் 1.15 கோடி பக்கங்கள் அடங்கிய ரகசிய ஆவணங்களை பனாமா பேப்பர்ஸ் என்ற பெயரில் வெளியிட்டது. அதில் வெளிநாடுகளில், போலியான நிறுவனங்களில் முதலீடு என்ற பெயரில், உலக தலைவர்கள் பலர் பணம் பதுக்கி வைத்துள்ளது அம்பலமாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இதில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து இது குறித்தான விசாரணை பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. அதில் 8 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக்குழுவை நீதிமன்றம் அமைத்தது.
 
இந்த குழுவின் விசாரணையில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், அவரது மகள், மருமகன், சகோதரர் ஆகியோர் குற்றம்சாட்டப்பட்டனர். இதன் விசாரணை முடிந்து விசாரணை குழுவின் அறிக்கை அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
 
இதனையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பு ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் முன்னிலையில் இன்று வெளியானது. இதில் நவாஸ் ஷெரீப் வெளிநாடுகளில் சொத்து சேர்த்தது உறுதியாகியுள்ளதால் அவர் மீது கிரிமினல் வழக்கு தொடரலாம் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் பாகிஸ்தான் பிரதமர் பதவியிலிருந்தும் அவரை தகுதி நீக்கம் செய்துள்ளது. இதனால் நவாஸ் ஷெரீப்பின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்