ஐ.நா.வை ஆத்திரமூட்டிய வடகொரியா

ஞாயிறு, 10 ஜூலை 2016 (14:00 IST)
உலக நாடுகளின் எதிர்ப்பையும், ஐ.நா.வின் பொருளாதார தடைகளையும் கண்டுகொள்ளாமல் 2006-ம் ஆண்டில் இருந்து அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது வடகொரியா. 3 முறை தொடர்ந்து அணுகுண்டு சோதனைகளை நடத்திய நிலையில், கடந்த ஜனவரி மாதம் அதிபயங்கர ஹைட்ரஜன் குண்டு சோதனை நடத்தி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை எரிச்சல் அடைய செய்துள்ளது.


 


வடகொரியாவின் அத்துமீறிய செயல்களால் கடும் அதிர்ச்சி அடைந்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும், அமெரிக்காவும் அந்த நாட்டுக்கு எதிராக மிகக் கடுமையான பொருளாதார தடைகளை விதித்தன. ஆனாலும் வடகொரியா, தொடர்ந்து கண்டம் விட்டு கண்டம் தாவி சென்று தாக்குதல் நடத்தும் ஆற்றல் வாய்ந்த ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.


வடகொரியாவில் மனித உரிமைகள் தொடர்ந்து மீறப்பட்டு வருவதற்கு அவர்தான் காரணம் என கூறி,  இந்த வாரத்தின் தொடக்கத்தில் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் மீது அமெரிக்கா தனிப்பட்ட முறையில் பொருளாதார தடைகளை விதித்தது. இந்த நிலையில் கொரிய தீபகற்ப பகுதியில் பதற்றத்தை மேலும் அதிகரிக்கிற வகையில் நீர்மூழ்கி ஏவுகணை சோதனை ஒன்றை வடகொரியா நேற்று நடத்தியது.
ஆனால் தொடக்க நிலையிலேயே, அது தோல்வி கண்டுவிட்டது.

வடகொரியாவின் இந்த ஆத்திரமூட்டும் நடவடிக்கையை தென்கொரிய அமெரிக்காவும், ஜப்பானும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இத்தகைய செயல்பாடுகளை வடகொரியா நிறுத்திக்கொள்ள வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறை கண்டித்துள்ளது.
 


 

வெப்துனியாவைப் படிக்கவும்