வடகொரிய அரசின் சொத்துக்களை முடக்க ஒபாமா அதிரடி உத்தரவு

வெள்ளி, 18 மார்ச் 2016 (12:20 IST)
அணு ஆயுத சோதனைகளை வட கொரியா தொடர்ந்து நிகழ்த்தி வருகிறது. இதற்கு பதிலடி தரும் விதமான அமெரிக்காவில் உள்ள வடகொரியா அரசின் சொத்துக்களை முடக்க அந்நாட்டு அதிபர் பராக் ஒபாமா உத்தரவு பிறப்பித்துள்ளார்.


 

 
2006 ஆம் ஆண்டு முதல் வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகின்றது. 
 
இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் 6 ஆம் தேதி சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் குண்டு சோதனை நடத்தியது.
 
இதனால். வடகொரியாவிற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து, வடகொரியா மீது ஐநா கடுமையான பொருளாதார தடைகளை விதித்து.
 
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் மீண்டும் அணு குண்டு சோதனை நடத்தப்போவதாக அந்நாடு அறிவித்தது.
 
வடகொரியாவின் தொடர் அணு ஆயுத சோதனைகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அந்த நாட்டின் மீது புதிய பொருளாதார தடைகளை விதித்து அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அதிரடியாக நிர்வாக உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
 
அந்த உத்தரவின் முக்கிய அம்சங்களாவன:-
 
அமெரிக்காவில் உள்ள வடகொரிய அரசின் சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்படும். வடகொரியாவில் அமெரிக்காவின் ஏற்றுமதிகளுக்கு தடை. வடகொரியாவில் அமெரிக்கா முதலீடு செய்ய தடை. வடகொரியாவுடன் தொடர்பு வைத்துள்ள எந்தவொரு நபர்மீதும், அவர் அமெரிக்கர் அல்லாதவராக இருந்தாலும் அவர்கள் கருப்பு பட்டியலில் சேர்க்கப்படுவார்கள்.
 
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. மேலும், வடகொரியா மீது விதிக்கப்பட்டுள்ள தடை அந்த நாட்டு மக்களை குறிவைத்து பிறப்பிக்கப்படவில்லை என்றும் அது அந்த நாட்டின் தலைமை மீதுதான் குறிவைத்து பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் ஒபாமா தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்