இந்தியாவின் நம்பர் 1 பணக்கார நிறுவனமான அதானி குழுமம் உலகம் முழுவதிலும் தனது அதானி எண்டெர்ப்ரைசஸ், எண்டிடிவி, அதானி க்ரீன் எனெர்ஜி, அதானி பவர், அதானி போர்ட் என பல கிளை நிறுவனங்கள் மூலம் ஏராளமான கோடி வர்த்தகத்தை செய்து வருகிறது. இதற்காக பல நாடுகளிலும் பல கோடிகளை அதானி நிறுவனம் முதலீடு செய்து வருகிறது.
அதுமட்டுமல்லாமல் பல நிறுவனங்களின் முதலீடுகளையும் தங்கள் பால் அதானி நிறுவனம் ஈர்த்து வருகிறது. பல நாட்டு அரசுகளின் இன்சூரன்ஸ், வைப்புநிதி நிறுவனங்களும் அதானி போன்ற பெரிய நிறுவன பங்குகளில் முதலீடு செய்கின்றன.
அந்த வகையில் நார்வேயில் மத்திய வங்கியான நோர்ஜஸ் வங்கி ஓய்வூதிய நிதி முதலீட்டிற்கு தகுதியான பன்னாட்டு நிறுவனங்களை தேர்வு செய்து முதலீடுகளை செய்து வருகிறது. அவ்வாறாக முதலீடு செய்ய தகுதி வாய்ந்த நிறுவனங்கள் என அந்நாட்டு வங்கி பட்டியலிட்டுள்ள நிறுவனங்களில் இருந்து அதானி நிறுவனத்தின் பெயர் நீக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நார்வே நிறுவனம் வெளியிட்டுள்ள விளக்கத்தில், அதானி நிறுவனத்தின் அதானி போர்ட்ஸ் துறைமுக நிறுவனம் போர் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விஷயங்களில் தொடர்பு கொண்டிருப்பதாகவும், அதனால் அதானியில் முதலீடு செய்வது அபாயம் என்று கருதுவதாகவும் தெரிவித்துள்ளது.