நேபாள நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 10,000-ஐ எட்டும் - நேபாள பிரதமர் உருக்கம்

செவ்வாய், 28 ஏப்ரல் 2015 (19:30 IST)
நேபாளத்தை புரட்டிப் போட்டிருக்கும் நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 10000 -ஐ எட்டும் அபாயம் உண்டு என்று அந்நாட்டு பிரதமர் சுஷில் கொய்ராலா கவலை தெரிவித்துள்ளார்.
 
கடந்த 25ஆம் தேதி காலை இமாலய மலைப்பகுதியில் இருக்கும் நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அலகில் 7.9 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் தலைநகர் காத்மண்டு உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் பேரழிவைச் சந்தித்துள்ளன. நேபாளத்தின் எல்லை நாடுகளிலும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளன.
 
தற்போதைய நிலவரப்படி, நேபாள நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4347 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. காயமடைந்தோர் எண்ணிக்கை 7500-க்கும் அதிகமாக உள்ளது. நேபாளத்துக்கு பல நாடுகள் உதவிக்கரம் அளித்து வருகிறது.
 
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்காக கூடாரங்கள் மற்றும் மருந்து பொருட்களை வழங்கி வெளிநாடுகள் உதவ வேண்டும் என்று அந்நாட்டு பிரதமர் சுஷில் கொய்ராலா அழைப்பு விடுத்துள்ளார். ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த உருக்காமான பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து அவர் மேலும் கூறும்போது, "நிலநடுக்க பலி எண்ணிக்கை 10,000 -ஐ எட்டும் அபாயம் உள்ளது. அரசுக்கு நிறைய கூடாரங்கள், மருத்துவ பொருட்களின் தேவை உள்ளது. எங்கள் மக்கள் மழையிலும் திறந்தவெளியிலும் உறங்குகின்றனர்.
 
7000-க்கும் அதிகமானோர் காயங்களுடன் உயிர் வாழ்கின்றனர். அவர்களுக்காக எங்களிடம் மருந்துகள் இல்லை. அவர்களுக்கு அளிக்க வேண்டிய சிகிச்சை மற்றும் மறுவாழ்வுக்கான பணிகளும் எங்களுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. போர்க்கால அடிப்படையில் அனைத்து உதவிகளையும் அரசு செய்து வருகிறது" என்றார்.
 
கடந்த 1934ஆம் ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்துக்கு 8,500 பேர் பலியாகினர். தற்போதைய நிலநடுக்க சூழல் அதனையும் தாண்டிய அபாயகரமான இறப்பு எண்ணிக்கையை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது. இமாலய மலைப்பகுதியில் ஏற்பட்ட மிக மோசமாக நிலநடுக்கமாக இந்த பேரிடர் பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்