அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் மாகாணத்தில், ஹூஸ்டன் நகரில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஏற்பாடு செய்த நலமா மோடி? என்கிற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் சுமார் 50 ஆயிரம் பேர் கலந்து கொண்ட நிலையில் பிரதமர் மோடி மேடை ஏறியதும் பார்வையாளர்களின் கைதட்டல் பல நிமிடங்கள் நீடித்தது
அதன்பின் பலத்த கரகோஷத்திற்கு இடையே எல்லோரும் சவுக்கியமா? என தமிழில் நலம் விசாரித்த பிரதமர் மோடி பின்னர் பேசியதாவது: இந்தியாவில் 130 கோடி மக்களுக்கும் சிறந்த வாழ்க்கை தரத்தை அளிப்பதற்காக தனது அரசு பாடுபட்டு வருவதாகவும், புதிய இந்தியா உருவாகி வருகிறது என்றும், அமெரிக்காவுக்கும் - இந்தியாவுக்கும் இடையே நட்புறவு பலமடைந்துள்ளதாகவும் தீவிரவாதிகளுக்கு எதிரான போராட்டத்தை தொடங்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும் பிரதமர் மோடி கூறினார்.
அமெரிக்க அதிபர் எளிதாக அணுகக்கூடியவராக இருக்கிறார் என்றும், எப்போதும் அன்புடனும், நட்புடனும் பழகுகிறார் என்றும் அமெரிக்காவின் பொருளாதாரத்தை வலுப்படுத்தியவர் டிரம்ப் என்றும் புகழாரம் சூட்டினார்.
ஒரே நாடு ஒரே வரி திட்டத்தின் மூலம் ஊழலை கட்டுப்படுத்தி வருவதாகவும், 3 லட்சம் போலி நிறுவனங்களை இனம் கண்டு அவற்றை மூடியுள்ளதாகவும் கூறிய பிரதமர், 2019 நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் மிக ஆர்வமாக வாக்களித்துள்ளதாகவும், புதிய இந்தியாவின் கனவுகளை நிறைவேற்ற இந்தியர்கள் கடுமையாக உழைக்கிறார்கள் என்றும், புதிய நிறுவனங்களுக்கு 24 மணி நேரத்தில் நிறுவன பதிவு தற்போது வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
தீவிரவாதத்துக்கு எதிராகவும் அதற்கு துணை நிற்போருக்கு எதிராகவும் தீர்க்கமான நடவடிக்கை தேவை என்று கூறிய பிரதமர் தனது முயற்சிக்கு டிரம்ப் எப்போதும் உறுதுணையாக இருப்பதாகவும், தனது நாட்டை வழிநடத்த முடியாதவர்களுக்கு பிரிவு 370ஐ ரத்து செய்ததில் சிக்கலாக இருக்கலாம் என்றும் பாகிஸ்தானுக்கும் கண்டனம் தெரிவித்தார்.