சீனாவில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கினாலும் தற்போது அமெரிக்கா மற்றும் இத்தாலியை கொரோனா கடுமையாக பாதித்து வருகிறது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் இத்தாலியில் மட்டும் 969 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தி அனைவரையும் திடுக்கிட வைத்துள்ளது. இதனை அடுத்து இத்தாலியில் மட்டும் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
அதுமட்டுமின்றி 80 ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இருப்பினும் ஒரு ஆறுதல் செய்தியாக நேற்று மட்டும் சுமார் 11,000 பேர் வரை கொரோனா வைரஸிலிருந்து முழுமையாக குணம் அடைந்து உள்ளனர் என்பதும் மூவாயிரத்துக்கு மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தாலியில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதால் நிலைமை கைமீறி போனதாகவே கருதப்படுகிறது.
அதேபோல் அமெரிக்காவிலும் மிக மோசமாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது. அமெரிக்காவில் கொரோனா பாதித்ததோரின் எண்ணிக்கை ஒரு லட்சமாக அதிகரித்துள்ளது என்பதும் கொரோனாவால் 1,545 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது