சவுதியில் ரத்து செய்யப்பட்ட விமானம்: இந்தியப் பயணிகள் தவிப்பு

வெள்ளி, 2 மே 2014 (11:27 IST)
சவுதி அரேபியாவிலிருந்து இந்தியாவுக்கு வரவேண்டிய விமானங்கள் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டதால் 350 இந்திய பயணிகள் பாதிப்படைந்தனர். 
சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரத்தில் உள்ள, மன்னர் அப்துல்லா சர்வதேச விமான நிலையத்திலிருந்து கோழிக்கோட்டிற்கு புறப்பட்ட AI 963 என்ற விமானம் தொழிநுட்பக் கோளாறினால் ரத்து செய்யப்பட்டதால் அதில் பயணம் செய்யவிருந்த பயணிகள் பல மணி நேரம் அங்கு அலைக்கழிக்கப் பட்டனர்.
 
ஹைட்ராலிக் சிஸ்டத்தில் ஏற்பட்ட கோளாறினால் கோழிக்கோடு மற்றும் ஐதராபாத் செல்லும் விமானங்களின் பயணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்கிருந்த பெண்கள், குழந்தைகள் உட்பட அனைத்துப் பயணிகளும் அருகில் உள்ள விடுதியில் தங்க வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இவர்களில் பல முதிய ஹஜ் பயனிகளும் இருந்ததாகக் கூறப்படுகின்றது.
 
பின்னர், இரண்டு A 320 விமானங்கள் டெல்லியிலிருந்தும், மும்பையிலிருந்தும் வரவழைக்கப்பட்டன. 342 இருக்கைகளைக் கொண்ட இந்த விமானங்கள் பயணிகளை ஏற்றிக்கொண்டு இந்தியா திரும்பும் என்று விமானத்துறைத் தகவல்கள் தெரிவித்துள்ளன. இந்திய முஸ்லிம் யூனியன் லீக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முகமது பஷீர் இந்த விமானத்தில் பயனம் செய்யவிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்