சேக்ரட் கேம்ஸால் தூக்கம் தொலைத்த நபர்: நடந்தது என்ன??

புதன், 21 ஆகஸ்ட் 2019 (11:34 IST)
நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியான சேக்ரட் கேம்ஸ் தொடரால் ஒருவர் தூக்கம் இழந்து அவதிப்பட்டுள்ளார்.

”நெட்ஃபிலிக்ஸ்” ஒரு பிரபலமான வீடியோ ஸ்டிரீமிங் இணையத்தளம். அதில் உலகளவில் வெளியான பல திரைப்படங்களும், தொடர்களும் காணக்கிடைக்கின்றன. மேலும் புதிது புதிதாக பல திரைப்படங்களும் தொடர்களும் நெட்ஃபிலிக்ஸ் மூலம் வெளிவந்துகொண்டும் இருக்கின்றன.

இந்நிலையில் கடந்த ஆகஸ்து 15 ஆம் தேதி அன்று நெட்ஃபிலிக்ஸ் இணையத்தளத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட “சேக்ரட் கேம்ஸ்” தொடரின் 2 ஆம் பாகம் வெளிவந்தது. இதன் முதல் பாகம், மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது வெளியான சேக்ரட் கேம்ஸ் தொடரின் இரண்டாம் பாகத்தில், சுலைமான் ஈஸா என்ற ஒரு முக்கிய தாதா கதாப்பாத்திரம் இடம்பெறுகிறது. அந்த கதாப்பாத்திரத்தின் 10 இலக்க நம்பர் ஒரு காட்சியில் காட்டப்பட்டது. அதை பார்த்த ரசிகர்கள் ஆர்வத்தில் அந்த 10 இலக்க நம்பருக்கு தொடர்பு கொண்டுள்ளனர். அந்த எண் உண்மையிலேயே ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வரும் இந்தியரான குன்கப்துல்லா என்பவருக்குச் சொந்தமானது.

ரசிகர்கள் பலர் குன்கப்துல்லாவின் எண்ணிற்கு தொடர்பு கொண்டு, சுலைமான் ஈஸாவிடம் பேச வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். உலகம் முழுவதும் இருந்து ஏராளமானோர் இவ்வாறு தொடர்பு கொண்டதால் குன்கப்துல்லா தனது தூக்கத்தை இழந்தது மட்டுமின்றி, செல்ஃபோன் சத்தம் கேட்டாலே ஒரு வித பய உணர்வு ஏற்படும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

இதனிடையில், தொடர் ஒளிப்பரப்பான சிறிது நேரத்திலேயே, அந்த காட்சியில் இடம்பெற்ற 10 இலக்க செல்ஃபோன் எண்ணை நீக்கிவிட்டோம் எனவும், சிரமம் ஏற்படுத்தியதற்கு மன்னிப்பு கோருகிறோம் எனவும் நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்