இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட பழங்கால பொருட்களை ஒப்படைத்த ஜோ பைடன்.. நன்றி சொன்ன மோடி..!

Siva

ஞாயிறு, 22 செப்டம்பர் 2024 (10:10 IST)
இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட 297 பழங்கால பொருட்களை அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒப்படைத்த நிலையில், பிரதமர் மோடி அமெரிக்க அதிபருக்கு நன்றி தெரிவித்தார்.

பிரதமர் மோடி அரசு முறை பயணமாக அமெரிக்காவுக்கு சென்ற போது, இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட 297 பழங்கால பொருட்களை ஒப்படைக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த பொருட்களை திருப்பிக் கொடுப்பதை உறுதி செய்த அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு, 'நன்றி உள்ளவனாக இருப்பேன்' என்று பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இந்தியாவிலிருந்து அமெரிக்கா உள்பட, பல்வேறு நாடுகளுக்கு பழங்கால பொக்கிஷங்கள் கடந்த பல ஆண்டுகளாக கடத்தப்பட்டு வந்துள்ள நிலையில், மோடி ஆட்சிக்கு வந்த பிறகு பல பொருட்கள் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில், இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் கலந்து கொள்ளும் குவாட் கூட்டமைப்பின் நான்காவது உச்சி மாநாட்டில், பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் உலக தலைவர்களை சந்தித்ததில் தனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்றும், சுகாதாரம், தொழில்நுட்பம், காலநிலை மாற்றம் உள்ளிட்ட துறைகள் குறித்து தொடர்ந்து ஆலோசனை செய்வோம் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்."

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்