கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை ராணுவத்தினருக்கும் இடையே நடந்த போரில், லட்சக்கணக்கானோர் பலியானதாக கூறப்படுகிறது. மேலும் 20 ஆயிரம் தமிழர்கள் காணாமல் போனதாகவும் செய்திகள் வெளிவந்தன.
இதனை தொடர்ந்து அப்போதைய பாதுகாப்பு செயலாளரும், தற்போதைய இலங்கை அதிபருமான கோத்தப்பய ராஜப்க்ஷே மீது தமிழர்கள் காணாமல் போனது குறித்தும் கொல்லப்பட்டது குறித்தும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் ஐநா உயர் அதிகாரியான ஹனாஸ் சிங்கர், இலங்கையில் கோத்தப்பய ராஜபக்ஷேவை சந்தித்தார்.
அப்போது, கோத்தப்பய ராஜபக்ஷே, “இறுதிகட்ட போரின் போது காணாமல் போன தமிழர்கள் இறந்துவிட்டனர். அதில் பெரும்பாலானோர் வலுக்கட்டாயமாக கடத்தி சென்று விடுதலை புலிகள் அவர்களின் படையில் சேர்த்துக்கொண்டனர், இதற்கு அவர்களின் குடும்பத்தினரே சான்றளித்துள்ளனர்” என கூறியுள்ளார்.
மேலும் அவர், “இதற்கான விசாரணை முடிந்த பிறகு, காணாமல் போனவர்களுக்கான மரண சான்றிதழ் வழங்கப்படும், பின்னர் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும்” எனவும் ஹான்ஸ் சிங்கரிடம் தெரிவித்துள்ளார்.