முன்னாள் விடுதலைப் புலி போராளிகளின் ’புதிய கட்சி’ உதயம்

வெள்ளி, 3 ஜூலை 2015 (20:31 IST)
முன்னாள் விடுதலைப் புலிகளின் இயக்கப் போராளிகளின் பிரதிநிதிகளும் ஆதரவாளர்களும் இணைந்து புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.
 

 
முன்னாள் விடுதலைப் புலிகளின் இயக்கப் போராளிகளின் பிரதிநிதிகளும் அவர்களது ஆதரவாளர்களும், நலன்விரும்பிகளும் இன்று காலை யாழ்ப்பாணத்தில் ஒன்று கூடி பொதுத்தேர்தல் நெருங்கிவரும் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தாம் ஆற்றக்கூடிய, ஆற்றவேண்டிய ஜனநாயகப் பங்குபணி குறித்து சுமார் மூன்று மணி நேரம் ஆராய்ந்தனர்.
 
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்த முக்கியப் போராளிகள் பலர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு, பல்வேறு விஷயங்கள் குறித்து ஆராய்ந்து தீர்மானங்களை எடுத்தனர்.
 
ஒரு சொட்டு தண்ணீர் கூட அருந்தாமல் அறப்போர் நிகழ்த்தி, தன்னையே ஆகுதியாக்கிய தியாகி திலீபன் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வீர மரணமடைந்த நல்லூர் கோயில் வீதியில், ஒன்றுகூடி அஞ்சலி செலுத்திய அவர்கள், தாம் எடுத்துக்கொண்ட தீர்மானங்களை செயற்படுத்துவது என்று உறுதிபூண்டனர்.
 
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்:
 
* முன்னாள் போராளிகள், அவர்களின் ஆதரவாளர்கள், நலன்விரும்பிகள் ஆகியோரை ஒன்றிணைத்து ‘ஜனநாயகப் போராளிகள் கட்சி’ என்ற அமைப்பில் அரசியல் செயற்பாடுகளில் முழு மூச்சாக ஈடுபடுவது. அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக என்.வித்தியாதரன் செயற்படுவார்.
 
* முன்னாள் போராளிகளும் அவர்களுக்கு உரித்தான பங்களிப்பை இவ்விடயத்தில் வழங்குவதற்கு வகை செய்யும் விதத்தில், எதிர்வரும் பொதுத் தேர்தலில் வடக்கு, கிழக்கு தேர்தல் மாவட்டங்கள் தோறும் தமது வேட்பாளர் பட்டியல்களில் விடுதலைப் புலிகளில் இயங்கிய தலா இரு முன்னாள் போராளிகளையாவது இணைத்துக்கொள்ளும்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையைக் கேட்டுக்கொள்வது.
 
* தமிழர்களின் உரிமைகளை ஈட்டுவதற்கான ஜனநாயக நடவடிக்கைகளில் அர்த்தமுள்ள வகையில் நேர்மையுடனும் நெஞ்சுரத்துடனும் ஈடுபட்டு, ஒரு முறையான அரசியல் தலைமைத்துவத்தை தமிழர்கள் மத்தியில் நிலைநிறுத்துவது.
 
* கடந்த கால இழப்புகளினால் பாதிக்கப்பட்ட நமது மக்களின் வாழ்வாதார வளங்களைக் கட்டி எழுப்பி, புனர்வாழ்வு, புனரமைப்புப் பணிகளை உத்வேகத்துடன் முன்னெடுத்து, அரசியல் கைதிகளின் வலியை நன்கு பட்டறிந்து உணர்ந்தவர்கள் என்ற வகையில் அவர்களின் விரைந்த விடுதலைக்கு அழுத்தம் தந்து அர்த்தமுள்ள வகையில் பங்களிப்பது.
 
* நீதி, நியாயமான ஜனநாயக நடவடிக்கைகளில் அர்த்த சுத்தியுடன் ஈடுபடுவதன் மூலம், தமிழ்ப்பேசும் மக்களின் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண்பதற்கு தமிழர்களுக்கும் தென்னிலங்கையின் நியாயமான அரசியல் தலைமைகளுக்கும் இடையில் பலமான இணைப்புப் பாலமாக விளங்கத்தக்க வகையில் வினைத்திறனுடனும் செயற்படுவது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்