பஸ்ஸில் வெடித்த வெடிகுண்டு; 15 பேர் பலி : பாகிஸ்தானில் பயங்கரம்

புதன், 16 மார்ச் 2016 (12:15 IST)
பாகிஸ்தான் அரசு ஊழியர்களை ஏற்றிக் கொண்டு சென்ற ஒரு பேருந்தில் வைக்கப்பட்ட வெடிகுண்டு வெடித்ததில், 15 அரசு ஊழியர்கள் மரணம் அடைந்தனர். மேலும் 30 பேர் காயமடைந்துள்ளனர்.


 

 
பாகிஸ்தானின் மார்டானில் இருந்து அரசு ஊழியர்களை ஏற்றிக்கொண்டு ஒரு பேருந்து பெஷாவர் நகரை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது தீடீரென அந்த பேருந்தில் பலத்த சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்தது. அதில் 15 பேர் உடல் சிதறி பரிதாபமாக பலியாயினர். 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
 
அந்த பேருந்தில் 50 அரசு ஊழியர்கள் இருந்தனர். அரசு ஊழியர்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்த பட்டிருப்பதாக தெரிகிறது. ஏராளமானோர் பலத்த காயங்களுடன் அனுமதிக்கப்பட்டிருப்பதால், பலி எண்ணிக்கை  உயரும் என அஞ்சப்படுகிறது.
 
இதையடுத்து அந்த பகுதியை போலீசார் தங்கள் வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர். 8 கிலோ எடை கொண்ட கண்ணி வெடி பேருந்தில் மறைக்க வைக்கப்பட்டு வெடிக்க செய்யப்பட்டுள்ளது என்று போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
 
விபத்து நடந்த இடத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த தாக்குதலுக்கு காரணமானவர்களை தேடும் பணியும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்த வெடிகுண்டு விபத்து அந்த பகுதி மக்களுக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது.
 
இதே பெஷாவர் பகுதி பல்வேறு கொடூரமான தாக்குதலை சந்தித்துள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு, இங்கு செயல்பட்ட ராணுவ பள்ளியில், தாலிபான் தீவிரவாதிகள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதில் 148 பள்ளிக் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். 
 
அந்த சம்பம் உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தீவிரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் அரசு எடுக்கும் நடவடிக்கைகளை கொஞ்சம் தளர்த்தும் போதெல்லாம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி அப்பாவி பொதுமக்களை கொல்வது அங்கு வாடிக்கையாகி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்