எபோலா பாதிப்பிற்கு பரிசோதனை மருந்து பயன்படுத்திய மருத்துவர் மரணம்

செவ்வாய், 26 ஆகஸ்ட் 2014 (16:12 IST)
லைபீரியாவை சேர்ந்த மருத்துவர் ஒருவர் எபோலா பாதிப்பிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உலக நாடுகளை எபோலா வைரஸ் தாக்குதல் அச்சுறுத்தி வரும் நிலையில், இந்த நோய் தாக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 1400 ஆக அதிகரித்துள்ளது. 
 
உயிர்க்கொல்லி நோயான எபோலா தாக்கியவர்களின் உடலில் இருந்து வெளியாகும் திரவம் மூலம்  மற்றவர்களுக்கு பரவும். காய்ச்சல், உடல் வலி, ரத்த கசிவு போன்றவை இந்த நோயின் அறிகுறிகள் ஆகும். 
 
இந்த நோய்க்கு இன்னும் அதிகாரப்பூர்வமான மருந்து கண்டுப்பிடிக்கப்படாத  நிலையில்,  நோய் தாக்கம் அதிகம் இருப்பதால் பரிசோதனை முறையில் தயாரிக்கப்பட்ட மருந்துகளை எபோலா பாதித்தவர்களுக்கு பயன்படுத்த உலக சுகாதார மையம் அனுமதி வழங்கியுள்ளது.
 
இந்நிலையில், ஆப்பிரிக்காவை சேர்ந்த மூன்று பேருக்கும், அமெரிக்காவை சேர்ந்த இருவருக்கும் அமெரிக்கா தயாரித்த சோதனை மருந்து ZMapp வழங்கப்பட்டது.
 
இந்த மருந்து பயன்படுத்திய பின் நல்ல முன்னேற்றமடைந்த ஆப்பிரிக்க மருத்துவர்  அப்ரஹாம் போர்போரின் உடல்நிலை திடீரென மோசமானது. இதன் பிறகு அவர் உயிரிழந்தார். இவருடன் மருந்து எடுத்துக்கொண்ட மேலும் இரு ஆப்பிரிக்கர்களின் நிலை குறித்து தகவல் வெளியாகாத நிலையில், இதே மருந்தை பயன்படுத்திய இரு அமெரிக்கர்களின் உடல்நிலை சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்